Published : 29 Jun 2018 12:11 PM
Last Updated : 29 Jun 2018 12:11 PM

மும்பையில் விபத்தில் சிக்கிய விமானத்துக்கு தகுதிச்சான்றிதழ் இல்லை; 6 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு, பறந்தது

மும்பையில் நேற்று கட்டிடத்தின் மோதி விபத்துக்குள்ளான சிறியரக விமானம், கடந்த 6 ஆண்டுகளாகப் பறப்பதற்கான தகுதிச்சான்று இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது.

கடந்த ஒன்றைரை ஆண்டுகளாக விமானத்தில் பழுதுநீக்கம் பணிகள் செய்யப்பட்டு, முதல் சோதனை ஓட்டத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது தெரியவந்துள்ளது.

மும்பையில் மையப்பகுதியான காட்கோபர் பகுதி, சர்வோதயா நகரில் நேற்று பிற்பகல் 1.30 மணி அளவில் சிறிய ரக விமானம் ஒன்று கட்டிடத்தின் மீது மோதி விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த பைலட், துணை பைலட் உள்ளிட்ட 4 பேரும், சாலையில் நடந்து ஒருவரும் பலியானார்கள்.

இந்த விபத்தில் சிக்கிய விமானம் கடந்த 2009-ம் ஆண்டு வரை உத்தரப்பிரதேசம் அரசின் வசம் இருந்து, அதன்பின் மும்பையில் உள்ள யு.வி. ஏவியேஷன் நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டு இருந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இந்த விமானம் பறப்பதற்கான எந்தவிதமான சான்றிதழையும் விமானப் போக்குவரத்து துறையிடம் இருந்து பெறவில்லை என்பது இப்போது தெரியவந்துள்ளது. மேலும், மதிய உணவு நேரத்துக்கு அந்த கட்டிடத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் சென்று இருந்ததால், ஏறக்குறைய 35 பேரின் உயிர் பிழைத்தனர். அவர்கள் பணியில் இருக்கும் போது விமானம் விழுந்திருந்தால், உயிர்சேதம் அதிகரித்து இருக்கும்.

இது குறித்து விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், யு.வி.ஏவியேஷன் நிறுவனத்துக்குச் சொந்தமான கிங் ஏர்-90 என்ற 12பேர் பயணம் செய்யக்கூடிய சிறிய ரக விமானம் கடந்த 2009-ம் ஆண்டுவரை உத்தரப்பிரதேச அரசிடம் இருந்தது.

ஆனால், கடந்த 2009-ம் ஆண்டு அலகாபாத் நகரில் இந்த விமானம் சிறிய விபத்தில் சிக்கியது. இதனால், விமானத்தை விற்பனை செய்ய உபி அரசு முடிவு செய்தது. இதையடுத்து, மும்பை நிறுவனம் இதைக் கடந்த 2014-ம் ஆண்டு விலைக்கு வாங்கியது.

கடந்த 10ஆண்டுகளாக இந்த விமானம் யு.வி.ஏவியேஷன் நிறுவனத்தால் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் நிறுத்தப்பட்டு இருந்தது. விமானப் போக்குவரத்துறையிடமும் பறப்பதற்கான தகுதிச்சான்றிதழ் பெறவில்லை. கடைசியாக இந்த விமானம் வானில் பறந்து 6 ஆண்டுகள் ஆகி இருந்தது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பராமரிப்பு பணிகள், பழுதுநீக்கம் செய்து விமானம் முதல்முறையாகச் சோதனை ஓட்டம் நடந்தது. சோதனை ஓட்டத்தின் போதுகூட இந்த விமானம் வானில் பறப்பதற்கான தகுதிச்சான்றிதழ் இல்லாமல் பறந்துள்ளது எனத் தெரிவித்தார்.

மும்பை ஜூஹு கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கும் ஜூஹு விமானநிலையத்தில் இருந்து நேற்று நண்பகல் ஒரு மணிக்குப் புறப்பட்ட விமானம், 4 நாட்டிகல் மைல் கடந்துவுடன் கட்டுப்பாட்டு அறைத் தொடர்பை இழந்து, விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து விமானப்போக்குவரத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சோதனை ஓட்டத்துக்கு விமானம் பறக்க வேண்டுமென்றால்கூட தகுதிச்சான்றிதழ் இன்றி பறக்கக் கூடாது. ஆனால், இந்த விமானம் கடைசியாக 6 ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டு, பறந்துள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். விமானத்தில் கருப்புப் பெட்டியை ஆய்வு செய்தபின், விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து தெரியவரும்’’ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x