Last Updated : 29 Jun, 2018 09:58 AM

 

Published : 29 Jun 2018 09:58 AM
Last Updated : 29 Jun 2018 09:58 AM

மத்திய அரசு ரத்து செய்த ஹஜ் மானியம்: முஸ்லீம்களுக்கு வழங்க தமிழக அரசு முடிவு

மத்திய அரசால் ரத்து செய்யப்பட்ட ஹஜ் மானியத்தொகையை மத்திய அரசு ரத்து செய்துள்ளபோதிலும், தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் முஸ்லீம்கள் பயன் பெறும் வகையில் அந்த மானியத் தொகையை தமிழக அரசே வழங்குகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு சட்டப்பேரவையில் வெளியாக உள்ளது.

புனித தலமான மெக்காவிற்கு வருடந்தோறும் பக்ரீத் பண்டிகை சமயத்தில் முஸ்லீம்கள் ஹஜ் யாத்திரை செல்வது வழக்கம். இந்த புனித பயணத்திற்காக முஸ்லீம்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. பல ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் முஸ்லீம்களுக்கு கிடைத்து வந்த இந்த மானியத்தை கடந்த ஜனவரியில் மத்திய அரசு ரத்து செய்து அறிவித்தது.

இந்த ஹஜ்மானியத்தை தமிழக முஸ்லீம் யாத்திரீகர்களுக்காக மாநில அரசு அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. கடந்த 7 ஆம் தேதி தமிழக வஃக்பு வாரியம் சார்பில் சென்னையில் ரம்ஜான் நோன்பு இப்தார் விருந்து நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரிடம் வஃக்பு வாரியம் சார்பில் இதுதொடர்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை தொடர்ந்து வஃக்பு வாரியத்தின் தலைவரும் மக்களவை எம்.பி.யுமான அன்வர் ராஜா, நேற்று மாலை தமிழக முதல்வரை திடீர் என சந்தித்து பேசினார். அப்போது, இன்று தமிழக சட்டப்பேரவையில் வரவிருக்கும் சிறுபான்மையினர்  நலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளிக்கும்போது, ஹஜ் மானியம் வழங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.

இது குறித்து ‘தி இந்து’விடம் அதிமுக சிறுபான்மைப் பிரிவு செயலாளர் அன்வர் ராஜா கூறும்போது, ‘‘புனித ஹஜ் யாத்திரைக்காக மத்திய அரசு ரத்து செய்த மானியத்தை தமிழக அரசு வழங்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மீது சமபந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து எந்நேரமும் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்.’ எனத் தெரிவித்தார்.

தமிழகத்தில் இருந்து சுமார் 3500 முஸ்லீம்கள் ஜூலை 29 ஆம் தேதி புனித யாத்திரை செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீண்டும் மானிய அறிவிக்கப்பட்டால் அவர்களுக்கு விமானக் கட்டணக்குறைப்பு உட்பட பல வசதிகள் கிடைக்கும் எனக் கருதப்படுகிறது. இந்த மானியத்தின் சுமார் பத்து கோடி ரூபாய்  ஆகும். மத்திய அரசு ரத்து செய்த மானியத்தை வழங்கும் முதல் மாநில அரசாக தமிழகம் இருக்கும்.

வஃக்பு வாரியத்திற்கு கூடுதல் பட்ஜெட்

இதனிடையே, தமிழக வஃக்பு வாரியத்திற்கு ஆண்டுதோறும் ரூபாய் 1.5 முதல் 2 கோடி வரை ஆண்டு செலவிற்காக மாநில அரசு ஒதுக்குகிறது. இதை ரூ.5 கோடியாக உயர்த்தி தரும்படியும் அன்வர் ராஜா முதல்வரிடம் கோரி உள்ளார். கூடுதல் ஒதுக்கீட்டால் வஃக்பு வாரியத்தின் வளர்ச்சி நடவடிக்கைகள் கூடுவதுடன், நிலுவையில் உள்ள அலுவலர் பணியிடங்களும் நிரப்பப்படும் வாய்ப்புகள் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x