Published : 29 Jun 2018 08:36 AM
Last Updated : 29 Jun 2018 08:36 AM

தீவிரவாதிகளின் சொர்க்கமாக பாகிஸ்தான் மாறுவதை சகிக்க முடியாது: ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் எச்சரிக்கை

தீவிரவாதிகளின் சொர்க்கமாக பாகிஸ்தான் மாறுவதை சகித்துக் கொள்ள முடியாது என்று ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே எச்சரித்துள்ளார்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் நிக்கி ஹாலே. கடந்த 2011 முதல் 2017 வரை அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாண ஆளுநராக பணியாற்றினார். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஐ.நா. தூதராகப் பொறுப் பேற்றார்.

இந்திய, அமெரிக்க உறவை வலுப்படுத்த அரசு முறை பயணமாக நிக்கி ஹாலே கடந்த 26-ம் தேதி டெல்லி வந்தார். பிரதமர் நரேந்திர மோடியை நேற்று முன்தினம் அவர் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

தீவிரவாதிகளின் சொர்க்கமாக பாகிஸ்தான் மாறுவதை அமெரிக்கா சகித்துக் கொள்ளாது. தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும். அணு மூலப் பொருட்கள் விநியோக குழுவில் இந்தியா இணைய அமெரிக்கா ஆதரவு அளிக்கும்.

சீனாவில் ஜனநாயகம் இல்லை. அந்த நாடு தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்த முயற்சிக்கிறது. இது கவலைக்குரியது. இந்திய, பசிபிக் கடலில் சுதந்திரமான கடல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இதே கருத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் வலியுறுத்தி வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

அமெரிக்காவில் சட்டவிரோத மாக நுழைந்ததாக 100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உட்பட பல நாட்டினர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அங்குள்ள 2 தடுப்பு மையங்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் சீக்கியர்கள் அதிகம் பேர் உள்ளனர். டெல்லியில் உள்ள குருத்வாராவுக்கு நிக்கி ஹாலே நேற்று சென்றபோது இந்த பிரச்சினை குறித்து சீக்கிய தலைவர்கள் எடுத்துரைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x