Last Updated : 29 Jun, 2018 08:23 AM

 

Published : 29 Jun 2018 08:23 AM
Last Updated : 29 Jun 2018 08:23 AM

கவுரி லங்கேஷ் கொலை வழக்கு: உண்மை கண்டறியும் சோதனைக்கு கைதி ஒப்புதல்

கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதானவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிஐடி அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

பெங்களூருவை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். இவ்வழக்கை சிறப்பு புலனாய்வுப் பிரிவு (சிஐடி) அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்தக் கொலை தொடர்பாக 3 மாதங்களுக்கு முன்பு இந்து யுவசேனா அமைப்பின் செயலாளர் கே.டி.நவீன் குமார் என்பவரை கைது செய்தனர்.

கவுரி லங்கேஷை கொலை செய்ய ஆயுதங்கள் வழங்கியதை நவீன்குமார் ஒப்புக்கொண்டார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஸ்ரீராம் சேனா அமைப்பைச் சேர்ந்த பரசுராம் வாக்மோர், அனில் காலே உள்ளிட்ட 6 பேரை கடந்த மாதம் போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் சிஐடி அதிகாரிகள் கடந்த மாதம் கே.டி.நவீன்குமாரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவெடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கே.டி.நவீன் குமார் அந்த சோதனை செய்தால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினார். இதனால் சிஐடி அதிகாரிகள் அவரது வ‌ழக்கறிஞர் வேதமூர்த்தி மூலம் கே.டி.நவீன் குமாரின் மனதை மாற்றும் முயற்சியில் இறங்கினர். இதையடுத்து, நேற்று முன்தினம் கே.டி.நவீன்குமார், ‘‘கவுரி லங்கேஷ் கொலை வழக்கிற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த உண்மையை நிரூபிப்பதற்காகவே, உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக் கொள்கிறேன். இந்த சோதனையின்போது எனது வழக்கறிஞர் வேத மூர்த்தி உடன் இருக்க அனுமதிக்க வேண்டும்''என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து, சிஐடி அதிகாரிகள் கே.டி.நவீன் குமாரை குஜராத்தில் உள்ள உண்மை கண்டறியும் ஆய்வகத்துக்கு ஜூலை முதல் வாரத்தில் அழைத்துச் செல்ல முடிவெடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x