Last Updated : 29 Jun, 2018 07:48 AM

 

Published : 29 Jun 2018 07:48 AM
Last Updated : 29 Jun 2018 07:48 AM

காவிரியில் தமிழகத்துக்கு 25 ஆயிரம் கன அடி நீர் திறப்பு: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகாவில் உள்ள கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு செல்லும் நீரின் அளவு கணிசமாக‌ அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, மண்டியா ஆகிய மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக‌ தென் மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆற்றின் குறுக்கேயுள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதேபோல், கபினி அணைக்கும் அதிகள‌வில் நீர் வந்தது.

சமர்ப்பண‌ பூஜை ஒத்திவைப்பு

கபினி அணையை பொறுத்தவரை, அதன் மொத்த கொள்ளளவான 2284 அடியில் 2282 அடியை தொட்டாலே, முழு கொள்ளளவை அடைந்துவிட்டதாக அறிவிக்கப்படும். பின்னர், சமர்ப்பண பூஜை நடத்தி, பாசனத்துக்காக அதிகளவில் நீர் திறந்துவிடப்படும். இதனால், தமிழகத்துக்கும் கூடுதலாக நீர் கிடைக்கும். தற்போது கபினி அணையின் நீர்மட்டம் 2282 அடியை தொட்ட போதிலும், முழு கொள்ளளவை எட்டியதாக அறிவிக்கப்படவில்லை. இதன் மூலம் அணைக்கு சமர்ப்பண பூஜை நடத்துவதை கர்நாடக அரசு திட்டமிட்டு ஒத்திவைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, கபினி அணையிலிருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி நீர், தமிழகத்துக்கு செல்லும் வகையில் காவிரியில் திறக்க‌ப்பட்டுள்ளதால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள‌து.

அனைத்துக் கட்சிக் கூட்டம்

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் நாளை (சனிக்கிழமை) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசால் அமைக்கப்பட்டிருக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனை பரிசீலிக்காத மத்திய அரசு, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றுக்கு உறுப்பினர்களை நியமித்து அரசாணை வெளியிட்டது. இதனால் அதிருப்தி அடைந்த கர்நாடக‌ முதல்வர் குமாரசாமி, இதுகுறித்து விவாதிப்பதற்காக, நாளை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x