Last Updated : 25 Jun, 2018 05:27 PM

 

Published : 25 Jun 2018 05:27 PM
Last Updated : 25 Jun 2018 05:27 PM

ஜிஎஸ்டி வரியை காங்கிரஸ் ஆட்சியில் எதிர்த்தீர்கள்; இப்போது பாராட்டுகிறீர்கள்?- பாஜகவுக்கு ப.சிதம்பரம் கேள்வி

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நேர்மையின் கொண்டாட்டம் என்று கூறும் பாஜக, காங்கிரஸ் ஆட்சியின் போது, கடுமையாக எதிர்த்தது ஏன் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் ஜிஎஸ்டிவரி அறிமுகப்படுத்தப்பட்டு ஜூலை மாதத்துடன் ஒரு ஆண்டு நிறைவடைகிறது. இது குறித்து 'மன்கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசி இருந்தார். அப்போது, அவர் பேசுகையில், ''ஜிஎஸ்டி வரி என்பது நேர்மையின் கொண்டாட்டம், இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியத்தை முடிவுக்குக் கொண்டுவந்த வரி'' என்று புகழ்ந்திருந்தார்.

ஜிஎஸ்டி வரியில் பாஜகவின் இரட்டை நிலைப்பாடு குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ட்விட்டரில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

’’ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டது நேர்மையின் வெற்றியாகவும், நேர்மையின் கொண்டாட்டமாகவும் இருந்தால், எதற்காக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஜிஎஸ்டி வரியைக் கொண்டுவர முயன்றபோது 5 ஆண்டுகள் எதிர்த்தது? ஜிஎஸ்டி வரியை முறையாகச் செயல்படுத்துவதில் உள்ள பல்வேறு குளறுபடிகளைப் பேசுவதற்கு ஏன் பிரதமர் மோடி, நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, தற்காலிக நிதி அமைச்சர் ஆகியோர் மறுக்கிறார்கள்.

இன்னும் எத்தனை நாட்களுக்கு ஜிஎஸ்டிஆர்-3பி படிவத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கப் போகிறது. இது சட்டபூர்வமாக செல்லுபடியான படிவமா? ஜிஎஸ்டிஆர்-படிவம்2, ஜிஎஸ்டிஆர் படிவம் 3 ஆகியவை ஒரு ஆண்டு ஆகியும் அதை ஏன் வெளியிடவில்லை. வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் ஜிஎஸ்டி வரி செலுத்தியும் அவர்களுக்கு முறையான ரீபண்ட் அளிக்கவில்லை. இதனால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்து ஒரு ஆண்டு ஆகியும் அவலம் தொடர்கிறது.''

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி வரியில் பதிவு செய்தவர்கள் அனைவரும் ஜிஎஸ்டிஆர் 3 பி படிவத்தைக் கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் மத்திய கலால் மற்றும் சுங்க வாரியம் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x