Published : 25 Jun 2018 04:46 PM
Last Updated : 25 Jun 2018 04:46 PM

சுடுகாட்டில் தூங்கிய தெலுங்குதேசம் கட்சி எம்எல்ஏவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டு

ஆந்திர மாநிலம், பாலக்கோல் தொகுதியின் தெலுங்குதேசம் கட்சி எம்எல்ஏ நிம்மலா ராமா நாயுடு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுடுகாட்டில் தூங்கியதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பால கொள்ளு தொகுதியின் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராமா நாயுடு.

பாலகொள்ளு நகரில் பல ஆண்டுகளாக சுடுகாடு பயன்படுத்தப்படாமல் மோசமான நிலையில் இருந்தது. இதை நவீன முறையில் மாற்றி அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர ராமா நாயுடு முடிவு செய்தார். சட்டப்பேரவையில் ராமா நாயுடுவின் கோரிக்கையை ஏற்று அந்த சுடுகாட்டை சீரமைக்க ரூ.3 கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்தது.

நிதி ஒதுக்கி பல நாட்கள் ஆகியும் சுடுகாடு சீரமைப்பு பணி நடைபெறவில்லை. ஒரு வழியாக ஒரு ஒப்பந்ததாரரை கண்டுபிடித்து அவரிடம் பணியைப் ஒப்படைத்தனர். ஆனால், அவர்களும் பேய், பிசாசு, தீயசக்தியை காரணம் காட்டி சுடுகாடு அமைக்கும் பணியை பாதியில் விட்டு சென்றுவிட்டனர்.

இதுகுறித்து அந்த ஒப்பந்ததாரரிடம் எம்எல்ஏ ராமா நாயுடு விசாரித்த போது சுடுகாடு சீரமைப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் அங்கு பேய், பிசாசு உலாவுவதாக பீதி அடைந்து அந்த பணிக்கு வர மறுக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

இதைதொடர்ந்து தொழிலாளர்களின் பயத்தை போக்கவும், அவர்களது மூட நம்பிக்கையை அகற்றவும் முடிவு செய்த ராமா நாயுடு எம்.எல்.ஏ. கடந்த வெள்ளிக்கிழமை இரவில் சுடுகாட்டிற்கு சென்றார். அங்கேயே இரவு உணவை சாப்பிட்டு, கட்டில் போட்டு அதில் தூங்கினார். அவருன் அவரின் உதவியாளர் மட்டும் இருந்தார். மறுநாள் காலையில்தான் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இது குறித்து எம்எல்ஏ ராமாநாயுடு கூறுகையில், பேய், பிசாசு, தீயசக்திகள் எனக் கூறிக்கொண்டு மக்கள் மூடநம்பிக்கையில் இருக்கின்றனர். அவர்களின் பயத்தையும், மூடநம்பிக்கையை உடைக்கவும்தான் நான் இரவில் சுடுகாட்டில் தங்கினேன். இப்போது தொழிலாளர்கள்மட்டுமல்லாமல், மக்களும் நம்பிக்கை பெற்றுள்ளனர்.

இன்று ஒருநாள் மட்டும் அடுத்து வரும் நாட்களும் கட்டிடப்பணியைப் மேற்பார்வையிடும் வகையில் இங்கு தங்க இருக்கிறேன். குப்பைகள் தேங்கி இருப்பதால், கொசுக்கடி கூடுதலாக இருக்கிறது.

இந்த சுடுகாடு நவீனப்படுத்தப்பட்டு குளியல் அறை, கழிப்பறை வசதி, மின்வசதியுடன் கூடிய மின்மயானமாக மாற்றப்படும். என்னுடைய முயற்சிக்குப் பின் இப்போது தொழிலாளர்கள் வேலைக்கு அச்சமின்றி வருகின்றனர் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், தெலங்கு தேசம் கட்சி எம்எல்ஏ நம்மலா ராமா நாயுடு மக்களுக்கு மூடநம்பிக்கைகளை போக்கி, விழிப்புணர்வு ஏற்படும் வகையில் செயல்பட்டதை கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டியுள்ளார். முதல்வர் பினராயி விஜயன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

சுடுகாட்டில் பேய், பிசாசு இருக்கிறது என நினைத்து அச்சமடைந்து தொழிலாளர்கள் சுடுகாடு கட்டிடபணிக்கு செல்ல மறுத்துவிட்டார்கள். ஆனால், அவர்களின் மூடநம்பிக்கையை அகற்றும் வகையில், விழிப்புணர்வு கொண்டுவரும் வகையில் சுடுகாட்டில் ஓர் இரவு தங்கிய எம்எல்ஏ நிம்மலா ராமா நாயுடுவின் செயல் பாராட்டுக்குரியது.

மூட நம்பிக்கைகளுக்கு எதிராக போராடக் கூடியவர் ராமாநாயுடு. தொழிலாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படும்வகையிலும், பேய், பிசாசு இல்லை மூடநம்பிக்கைகள்தான் என்று அறிவுறுத்தும் வகையில், இன்னும் சில நாட்கள் சுடுகாட்டில் தங்க இருக்கிறேன் என்று ராமா நாயுடு கூறியிருப்பது பாராட்டுக்குரியது.

ராமா நாயுடுவின் முயற்சி என்பது அவரின் தொகுதிக்குள்ளே மட்டும் முடிந்துவிடவில்லை. இது தேசிய முக்கியத்துவம் உடையதாகும். நாட்டில் சில சக்திகள் மூடநம்பிக்கைகளையும், பல்வேறு காலத்துக்கு உதவாக பழங்கங்களையும் வலுக்கட்டாயமாக செய்துவரும் நிலையில் அவற்றுக்கு எதிராக ராமா நாயுடுவின் செயல் அமைந்துள்ளது

இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x