Published : 25 Jun 2018 07:40 AM
Last Updated : 25 Jun 2018 07:40 AM

பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம் உட்பட அண்டை நாட்டு எல்லைப் பகுதிகளில் 3 ஆண்டுகளாக கடத்தல்கள் அதிகரிப்பு

அண்டை நாடுகளுடனான சர்வதேச எல்லை பகுதிகளில் போதைப் பொருள், ஆயுதங்கள் கடத்தல், கடந்த 3 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித் துள்ளது.

பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், மியான்மர் ஆகிய அண்டை நாடுகளுடனான சர்வதேச எல்லை பகுதிகளில் போதைப் பொருள், ஆயுதங்கள், கால்நடைகள் கடத்தல் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் தொகுத்துள்ளது. அதில் கடந்த 3 ஆண்டுகளாக சர்வதேச எல்லை பகுதிகளில் கடத்தல்கள் கணிசமாக அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், மியான்மர் ஆகிய நாடுகளின் எல்லை பகுதிகளில் கடந்த 2015-ம் ஆண்டு 19,537 கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக வழக்குப் பதிவாகி உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு 23,198 கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த எண்ணிக்கை 2017-ம் ஆண்டில் 31,593 ஆக அதிகரித்துள்ளது.

மேற்கூறிய நாடுகளுடன் சீனாவுடன் சேர்த்து இந்தியாவுக்கு 15 ஆயிரம் கி.மீ. தூர எல்லையை கொண்டுள்ளது. அந்த எல்லைப் பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பல்வேறு எல்லை பாதுகாப்புப் படையினர் காவல் காத்து வருகின்றனர்.

இந்த எல்லைப் பகுதிகளில் கடத்தல் தொடர்பாக கடந்த 2015-ம் ஆண்டு 1,501 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டு 1,893 பேர் கைது கைது செய்யப்பட்டனர். இந்த எண்ணிக்கை 2017-ம் ஆண்டில் 2,299 ஆக அதிகரித்துள்ளது. இவற்றில் பெரும்பாலான சம்பவங்கள் இந்திய - வங்கதேச எல்லை பகுதிகளில்தான் நடந்துள்ளன.

வங்கதேசத்துடன் இந்தியாவுக்கு 4,000 கி.மீ. தூரம் எல்லைப் பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு 18,132 கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன. அது 2016-ல் 21,771 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு அந்த எண்ணிக்கை 29,693 ஆக அதிகரித்துள்ளது.

எனினும், இந்திய - வங்கதேச எல்லை பகுதியில் கடத்தல் தொடர்பான கைது எண்ணிக்கை கடந்த ஆண்டு குறைந்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு கடத்தல் தொடர்பாக இந்திய - வங்கதேச எல்லையில் 656 பேர், 2016-ல் 751 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், 2017-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 633 ஆக குறைந்துள்ளது. இதேபோல் 2017-ம் ஆண்டில் இந்திய - நேபாள எல்லையில் ஆயுதங்கள், போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களின் எண்ணிக்கை 1,563 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x