Published : 25 Jun 2018 07:37 AM
Last Updated : 25 Jun 2018 07:37 AM

மக்களவை தேர்தல் ஆயத்த பணிகளை தொடங்கியது பாஜக: 28-ல் உ.பி. பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் பிரதமர் மோடி

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஆயத்த பணிகளை பாஜக தொடங்கி விட்டது. உத்தரபிரதேசத்தில் வரும் 28-ம் தேதி பாஜக சார்பில் நடைபெறவுள்ள பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச உள்ளார். இது மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கமாக இருக்கும் என கருதப்படுகிறது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக, எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டு வருகிறது. இதனிடையே சமீபத்தில் சில தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து, மக்களவைத் தேர்தலை சந்திப்பதற்காக பல்வேறு வியூகங்களை வகுக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள சந்த் கபீர் நகர் மாவட்டம் மகார் நகரில் வரும் 28-ம் தேதி பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் செய்து வருகிறார். இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேச உள்ளார்.

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கமாக இது இருக்கும் என கருதப்படுகிறது. எதிர்க்கட்சியினருக்கு சவால் விடும் வகையில் தங்கள் பலத்தை நிரூபிப்பதற்காக சுமார் 2.5 லட்சம் பேரை திரட்டுமாறு கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் வரும் 26-ம் தேதி பார்வையிட உள்ளார்.

15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புலவர் சந்த் கபீர் வசித்த இடம்தான் மகார். இவரது நினைவாக மகார் நகரில் கோயில் கட்டப்பட்டுள்ளது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மகார் நகருக்கு செல்லும் மோடி, அங்குள்ள கபீரின் கோயிலுக்கு செல்ல உள்ளார். மேலும் இந்த நகரை சுற்றுலா தலமாக மாற்ற மாநில அரசு ஏற்கெனவே முயற்சி மேற்கொண்டு வருகிறது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் முதல் முறையாக பொறுப்பாளர்களை நியமிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபோல, ஒவ்வொரு மாநிலத்திலும் 11 உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் ஆயத்த குழுவை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுதவிர, 3 உறுப்பினர் சமூக ஊடகக் குழு, 3 உறுப்பினர் சட்ட நிபுணர் குழு மற்றும் மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட அமலாக்கத்தை கண்காணிக்க 2 உறுப்பினர் கண்காணிப்பு குழு ஆகியவற்றையும் நியமிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x