Last Updated : 23 Jun, 2018 08:47 PM

 

Published : 23 Jun 2018 08:47 PM
Last Updated : 23 Jun 2018 08:47 PM

அமித் ஷா இயக்குநராக இருக்கும் வங்கியில் 5 நாட்களில் ரூ.745 கோடி செல்லாத ரூபாய் எப்படி டெபாசிட் ஆனது : கேள்விகளால் துளைத்த சிவசேனா

பாஜக தலைவர் அமித் ஷா இயக்குநராக இருக்கும் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் பணமதிப்பு நீக்கத்துக்குப் பின், 5 நாட்களில் ரூ.745 கோடிக்குச் செல்லாத ரூபாய் நோட்டுகள் டெபாசிட் ஆனது எப்படி, ஒரு வங்கியில் இவ்வளவு பணம் எப்படி டெபாசிட் செய்யப்பட்டது போன்ற கேள்விகளை பாஜகவுக்கும், மத்திய அரசுக்கும் சிவசேனா கட்சி எழுப்பியுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ம் தேதி கொண்டு வரப்பட்ட பணமதிப்புநீக்க அறிவிப்புக்குப்பின் அடுத்த 5 நாட்களில் அமித் ஷா இயக்குநராக இருக்கும் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் பணமதிப்பு நீக்கத்துக்குப் பின் ரூ.745 கோடிக்குச் செல்லாத ரூபாய் நோட்டுகள் டெபாசிட் ஆனது என ஆர்டிஐ மூலம் தெரியவந்தது.

இது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி சிவசேனா கட்சி தனது அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாம்னா’ வில் தலையங்கத்தில் எழுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

கடந்த 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ம் தேதி மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்புநீக்க நடவடிக்கைக்கு அடுத்த 5 நாட்களில் அமித்ஷா இயக்குநராக இருக்கும் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் ரூ.745 கோடிக்குச் செல்லாத ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. இதேபோல குஜராத்தின் கேபினெட் அமைச்சராக இருந்த ஜெயேஷ் ராதாதய்யா தலைவராக இருக்கும் ராஜ்கோட் மாவட்ட கூட்டுறவு வங்கியில் ரூ.693.19 கோடிக்குச் செல்லாத ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சில மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் இந்த அளவுக்கு மிக அதிகமாகச் செல்லாத ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட காரணம் என்ன?, மிகப்பெரிய தொகை எப்படி 5 நாட்களில் டெபாசிட் செய்யப்பட்டது?, இது மிகவும் கவலைகொள்ளத்தக்க, கவனிக்கத்தக்க விஷயமாகும். இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்.

இந்த விஷயத்தின் தீவிரத்தன்மை குறித்து தற்போது தற்கால நிதி அமைச்சராக இருக்கும் பியூஷ் கோயலுக்கு தெரியவில்லை.நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளுக்கு எல்லாம் ஒரேமாதிரியான விதிமுறை கடைபிடிப்பதற்கு பதிலாகக் கூட்டுறவு வங்கிகளுக்கு இடையே பல்வேறு விதமான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

மஹாராஷ்டிராவில் மாவட்ட கூட்டுறவு வங்கிகளி் செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளவும், டெபாசிட் செய்யவும் தடைவிதிக்கப்பட்டது. நாஸிக் மாவட்ட கூட்டுறவு வங்கியில் ரூ.341 கோடி டெபாசிட் சந்தேகத்துக்கு இடமானது என்று அறிவிக்கப்பட்டு அதன்பின் டெபாசிட்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. இதேபோன்று நாடுமுழுவதும் மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு இடையே பல்வேறு விதிமுறைகள் இருந்ததால், மக்களிடையே பெரும் குழப்பமும், பொருளாதாரச் சீர்குலைவும் ஏற்பட்டது.

இந்த நாடு இப்போதுதான் பணமதிப்புநீக்கத்தின் தாக்கத்தை உணர்ந்து வருகிறது. இந்தக் குழப்பத்துக்கு மிகப்பெரிய காரணம் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல்தான். அவரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனை திரும்ப அழைத்து, இந்தக் குழப்பம் குறித்துக் கூறி தீர்வுகாண வேண்டும். மோடியின் பணமதிப்புநீக்க நடவடிக்கைக்கு இந்த நாடு மிகப்பெரிய விலை கொடுத்துவிட்டது. அமைப்புசாரா தொழில்கள், சிறு,குறுந்தொழில்கள் ஒட்டுமொத்தமாக அழிந்துவிட்டன, வேலையின்மை அதிகரித்துவிட்டது, லட்சக்கணக்கான மக்கள் வேலையிழந்து பாதிக்கப்பட்டனர்.

ஆனால், மத்தியில் ஆளும் பாஜக கட்சி பணமதிப்புநீக்க நடவடிக்கையைக் கொண்டுவந்தபின், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் ஒழிந்துவிடும், தீவிரவாதிகளுக்கு பணம் கிடைப்பது தடுக்கப்படும் என்று கூறியது. ஆனால், பிரதமர் மோடி 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதிக்கு அடுத்த நாளே ரூ.2000 கள்ளநோட்டுகள் புழக்கத்துக்கு வந்து அதை போலீஸார் கண்டுபிடித்தனர்.

நாடு மிகப்பெரிய பொருளாதார குழப்பத்தைச் சந்தித்து வருகிறது, அதிகரித்து வருகிறது இந்த நேரத்தில், அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் ராஜினாமா செய்து நாட்டைவிட்டுச் சென்றுவிட்டார்.

இந்தப் பிரச்சினைகளுக்கு மத்தியில் பேங்க் ஆப் மஹாராஷ்டிராவின் தலைமை மேலாண் இயக்குநர் உள்ளிட்டவர்களை மத்திய அரசு கைது செய்துள்ளது. இந்த வங்கி மோசடியின் முக்கியக் குற்றவாளிகள் ஏற்கனவே தப்பிஓடிவிட்டனர். ஆனால், இவர்களை கைது செய்துள்ளது அரசு.மத்திய அரசின் கடினமான நடவடிக்கைக்கு வாழ்த்துக்கள்.

போலியாகக் கடன் கொடுத்த வங்கித்தலைவர்கள் எத்தனைப் பேர் இதுவரை சிறைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறார்கள்?. பாஜக தலைவர் அமித் ஷா கூட அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியின் இயக்குநர்தான். அவர் வங்கியில் செல்லாத ரூபாய் நோட்டுகள் ரூ.745 கோடி பணமதிப்புநீக்கத்தின் போது 5 நாட்களில் டெபாசிட் செய்யப்பட்டது.

இத்தனை குழப்பத்துக்கும் காரணமாக, பெரும் பணக்காரர்களை, தொழிலதிபர்களை வெளிநாட்டுக்குத் தப்பவிட்ட வங்கிகளின் தலைவர்கள், ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல் ஆகியோர் மீது தற்போதைய நிதி அமைச்சர் பியூஸ் கோயல் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்?

இவ்வாறு சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x