Published : 23 Jun 2018 05:06 PM
Last Updated : 23 Jun 2018 05:06 PM

மனைவியை சுட்டுக் கொன்ற ரியல் எஸ்டேட் அதிபர்: 18 மணிநேரம் போலீஸூக்கு போக்குகாட்டி குழந்தைகளை கொல்ல முயன்று சிக்கினார்

கர்நாடகாவில் மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு, குழந்தைகளையும் கொல்ல முயன்று 18 மணிநேரம் போலீஸூக்கு போக்கு காட்டிய ரியல் எஸ்டேட் அதிபரை போலீஸார் இறுதியாக கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் கனபுராவில் காலேஷ்பூரைச் சேர்ந்தவர் கணேஷ். அங்கு காபி தோட்டம் வைத்திருந்த அவர் பின்னர் அதனை விற்றுவிட்டு, பெங்களூருவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன், ரியல் எஸ்டேட் தொழில் கொழித்ததால் தொடக்கத்தில் அவர் பணம் சம்பாதித்துள்ளார்.

ஆனால் பின்னர் தொழில் மந்தமாகவே அவருக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் கணேஷ் தீவிரமாக தொழிலில் ஈடுபட்டுள்ளார். பெரிய அளவல் நஷ்டம் ஏற்படவே, கந்து வட்டிக்கு கடன் வாங்கி தொழில் செய்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததால் தனது சொத்துக்கள் விற்று கடனை அடைத்துள்ளார்.

இதுதொடர்பாக கணேஷக்கும் அவரது மனைவி சஹானாவுக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. குழந்தைகளுக்கு ஏதும் வைக்காமல் கடனுக்காக சொத்துக்களை விற்று வருவதை சஹானா கண்டித்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த வியாழனன்று பெங்களூரில் வீட்டில் இருந்தபோது இருவருக்கும் கடும் சண்டை நடந்துள்ளது. ஆத்திரம் அடைந்த கணேஷ் லைசென்ஸ் பெற்று, தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சஹானாவை சுட்டு கொலை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் மிதந்த சஹானா அங்கேய உயிரிழந்தார். செய்வதறியாமல் கணேஷ் வீட்டை பூட்டிவிட்டு, காரில் கிளம்பினார்.

பள்ளியில் இருந்த குழந்தைகளை அழைத்துக் கொண்டு காரில் ராம்நகர் மாவட்டத்தில் உள்ள பனகிரி ரிசார்ட்டுக்கு சென்றார். அதற்குள் பெங்களூருவில் சஹானா தொலைபேசியை எடுக்காததால் சந்தேகமடைந்த அவரது தந்தை வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். கதவு திறக்கததால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து திறந்து பார்த்தபோது சஹானாவின் உடல் ரத்த வெள்ளத்தில் மிதப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார்.

இதையடுத்த போலீஸார் உடனடியாக தனிப்படை அமைத்து கணேஷை தேடத் தொடங்கினர். அவரது நண்பர்கள் கொடுத்த தகவலின் பேரில் கணேஷை போலீஸார் துரத்தினர். இதனால் அவர் தான் தங்கியிருந்த ரிசார்ட்டில் இருந்து வெளியேறி வேறு ஒரு இடத்திற்கு மாறியுள்ளார். பின்னர் காரின பின் சீட்டில் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு காரிலேயே சில மணி தூரம் பயணம் செய்து போலீஸூக்கு போக்கு காட்டினார். ஆனாலும் அவரது இருப்பிடத்தை தெரிந்து போலீஸார் பின் தொடர்ந்தனர்.

சுமார் 18 மணிநேரம் இந்த ஓட்டம் நீடித்தது. போலீஸாரிடம் சரணடைய விரும்பாத கணேஷ், தனது குழந்தைகளையும் துப்பாக்கியால் சுட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து குழந்தைகளை துப்பாக்கியால் சுட்ட கணேஷ் தற்கொலை செய்து கொள்ள தைரியமின்றி தயங்கியுள்ளார்.

அடுத்த என்ன செய்வது என்று அவர் தவித்துக் கொண்டிருந்த வேளையில் பனகிரி தேசிய நெடுஞ்சாலையில் கர்நாடக போலீஸார் அவரை மடக்கி பிடித்தனர். மீட்கப்பட்ட இரண்டு குழந்தைகளும் உடனடியாக மருத்வமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கணேஷை கைது செய்த போலீஸார் பெங்களூரு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x