Published : 23 Jun 2018 04:54 PM
Last Updated : 23 Jun 2018 04:54 PM

‘நீதித்துறைக்கு சுதந்திரம் இல்லாவிட்டால், ஜனநாயகம் நீடிக்காது’: முன்னாள் நீதிபதி செலமேஸ்வர் சாட்டையடி பேட்டி

நீதித்துறைக்குச் சுதந்திரம் இல்லாவிட்டால், நாட்டில் ஜனநாயகம் நீடித்திருக்காது என்று ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஜஸ்தி செலமேஸ்வர் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக கடந்த 7 ஆண்டுகளாகச் செயல்பட்ட ஜஸ்தி செலமேஸ்வர் வெள்ளிக்கிழமை இரவு ஓய்வு பெற்றார். ஆனால், ஓய்வு பெறும் அன்றே தனது உடைமைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அரசு வழங்கிய வீட்டைக் காலி செய்து கிராமத்தில் உள்ள தனது இல்லத்துக்குச் சென்றார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார் என்று மூத்த நீதிபதிகள் 4 பேர் ஊடகங்களுக்குப் பகிரங்கமாக பேட்டியளித்தனர். அதில்முக்கியமானவர் செலமேஸ்வர்.

ஜனநாயகம் நிலைத்திருக்க வேண்டும், மதச்சார்பின்மையுடன் நடக்க வேண்டும், நெறிபிறளாமல் நீதிபரிபாலனம் செய்யவேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருந்த செலமேஸ்வர். அவரின் பல தீர்ப்புகள் முத்தாய்ப்பானவையாக அமைந்திருக்கின்றன. அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் தனது எதிர்கால வாழ்க்கை, சிந்தனைகள், திட்டம் ஆகியவை குறித்து விளக்கியுள்ளார். இதில் அவர் கூறியதாவது:

 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு குறித்து:

நான் செய்ததில் எந்தவிதமான தவறும் இல்லை என நினைக்கிறேன். அந்தப் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் என்னுடன் சேர்ந்து மேலும் 3 மூத்த நீதிபதிகள் இருந்தனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்போதும் சொல்கிறேன் நான் சொன்னதில் தவறில்லை.

‘நான் புரட்சிக்காரன் அல்ல’

என்னை நான் ஒரு ‘ஜனநாயகவாதி’ என்று கூறிக்கொள்ளவே விரும்புகிறேன். இந்த நாடு மிகச்சிறந்த ஜனநாயக சமூகமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். ஒவ்வொருவரும் என்னை, புரட்சிக்காரர், குழப்பம் விளைவிப்பவர், கம்யூனிஸ்ட், சிலர் தேசவிரோதி என்றெல்லாம் அழைக்கிறார்கள். ஆனால், நான் நாட்டுமக்களுக்கு தேவையான பணிகளைச் செய்திருக்கிறேன்.

நீதித்துறைக்கு சுதந்திரமில்லாமல், நாட்டில் ஜனநாயகம் தளைக்காது, வாழாது என்பது என்னுடைய கருத்தாகும். நாங்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்திய காலத்தில், நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நினைத்த காரணத்தால் நாங்கள் நடத்தினோம், அதுமட்டும்லாமல் இந்த நாட்டு மக்களுக்கும் சூழலை தெரிவிக்க விரும்பினோம்.

என்னுடைய மனசாட்சிக்கு உட்பட்டே நான் செயல்பட்டேன், பணியாற்றினேன்.என்னுடைய நம்பிக்கைகள், செயல்பாடுகள் சரியானதா இல்லையா என்பதை, முடிவு செய்ய வேண்டியது எதிர்கால சந்ததியினரும், சமூகமும் ஆகும்.

கே.எம் ஜோஸப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்த்துவது குறித்து  மத்திய அரசு முடிவு எடுக்காதது பற்றி:

அது மிகவும் துரதிருஷ்டமான சம்பவம், இன்னும் கிடப்பில் இருக்கிறது. நீதிபதி ஜோஸப்பைப் போன்ற ஒரு மனிதர் உச்ச நீதிமன்றத்துக்கு வர வேண்டும் என்று நான் நம்பினேன், அவ்வாறு வந்தால், நீதித்துறைக்குப் பலனுள்ளதாக, சிறப்பாக இருக்கும் என்று நினைத்தேன். இன்னும் நம்பிக்கை இருக்கிறது அது நடக்கும்.

குழப்பம் ஏற்படாது:

அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனத்தில் குழப்பம் பற்றிய கருத்துகளெல்லாம் கற்பனைகள்தான். எந்தவிதான குழப்பமும் நடைபெறும் என நான் நினைக்கவில்லை.

ஓய்வுக்குப் பிறகு....

ஓய்வுக்குப் பிறகு  எந்தவிதமான அரசு பணியையும் நான் ஏற்கத் தயாராகஇல்லை.

பின்புலம்...

நான் கிராமத்தில் இருந்து வந்தவன். பள்ளி செல்லும் நாட்களில் மழைபெய்தால் பள்ளிக்கு விடுமுறை விடப்படும். ஏனென்றால், பள்ளிக்கு மேற்கூரை இருக்காது. வாழ்க்கையை மிகவும் நெருக்கமாகப் பார்த்திருக்கிறேன், ஏட்டுப்படிப்பைக் காட்டிலும் அனுபவப்பாடத்தை அதிகமாகப் படித்திருக்கிறேன். நான் விவசாயம் செய்யவில்லை. ஆனால், என்னுடைய தந்தை, உறவினர்கள், குடும்பத்தார் இன்னும் விவசாயம் செய்துவருகிறார்கள்.

எதிர்காலம் எப்படி?

நான் அரசியலில் நுழையப் போவதுஇல்லை. தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. அரசியல் குறித்து பேசலாம், பார்க்கலாம்,அதில்தான் எனக்கு விருப்பம். என்னுடைய கடந்த கால வாழ்க்கை குறித்து எழுதும் திட்டம் என்னிடம் இல்லை. ஆனால், பிகே முகர்ஜியின் புத்தகத்தை மறுஆய்வு செய்து கொடுக்க சம்மதித்து இருக்கிறேன். இந்திய அரசியலமைப்பில் குறிப்பிட்ட பிரிவுகள் குறித்து புத்தகம் எழுதும் திட்டம் இருக்கிறது

இவ்வாறு செலமேஸ்வர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x