Published : 23 Jun 2018 03:59 PM
Last Updated : 23 Jun 2018 03:59 PM

நிபா வைரஸ் போய் டெங்கு வந்தது: கேரளாவில் ஏராளமானோர் பாதிப்பு

 கேரளாவில் நிபா வைரஸ் பீதி அடங்குவதற்குள் தற்போது அங்கு டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கி இருப்பதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. உயிரை பறிக்கும் ஆபத்துள்ள மூன்றாம் வகை டெங்கு பாதிப்பு பரவி வருவதால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.

கேரளாவில் கடந்த மாதம் நிபா வைரஸ் பரவியது. கோழிக்கோடு மாவட்டத்தில் பலர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகினர். பெரும்பரா பகுதியில் உள்ள சூபிக்கடா கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு தான் முதலில் இந்த வைரஸ் தாக்கியது. கடும் காய்ச்சல் ஏற்பட்டு இவர்கள் மூன்று பேரும் உயிரிழந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளித்த செவிலியர் ஒருவரும் உயிரிழந்தார்.

பழம் தின்னி வவ்வால் மூலம் பரவும் நிபா வைரஸ் கேரளாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. நிபா வைரஸ் பீதி தற்போது தான் அங்கு குறைந்து வருகிறது.

இந்நிலையில் அங்கு டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. கேரளா முழுவதும் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில், பத்தினம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பத்தினம்திட்டா மாவட்டத்தில் ஆராமுலா, ராணி, வெச்சூசிரா, எலந்தூர், கோணி, உள்ளிட்ட பல நகரங்களில் டெங்கு காய்ச்சலால் 200க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நான்கு வகையான டெங்கு காய்ச்சல் பாதிப்பும் இங்கு காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மிகவும் அபாயகரமான மூன்றாம் வகை டெங்கு காய்ச்சல் பாதிப்பு சிலருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறுகையில் ‘‘கேரளாவில் பருவமழை தொடங்கியதில் இருந்தே டெங்கு காய்ச்சல் பாதிப்பு தென்படத் தொடங்கியுள்ளது. பத்தினம்திட்டா உள்ளிட்ட மாவடங்களில் சில நாட்களாக ஒரு சிலருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு தென்பட்டது. இந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கூடுதல் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்து வருகிறோம். டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடந்து வருகின்றன’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x