Published : 23 Jun 2018 01:03 PM
Last Updated : 23 Jun 2018 01:03 PM

மாங்காய் பறித்த 10 வயது சிறுவனின் தலையில் பாய்ந்த துப்பாக்கிக் குண்டு: தோட்டக்காரர் தப்பி ஓட்டம்

பீகார் மாநிலத்தில், ககாரியா மாவட்டத்தில் தோட்டத்தில் மாங்காய் பறித்த 10வயது சிறுவனை துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொன்ற அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது.

ககாரியா மாவட்டத்தில், ஷேர்கார்க் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் சத்யம் குமார்(வயது10). இந்தச் சிறுவன் தனது கிராமத்துக்கு பக்கத்தில் உள்ள பத்ராலா கிராமத்தில் உள்ள தனது நண்பர்களுடன் சேர்ந்து வியாழக்கிழமை விளையாடச் சென்றான். அப்போது, பத்ராலா கிராமத்தில் உள்ள ஒரு மாந்தோப்பில் சிறுவர்கள் காவல்காரருக்கு தெரியாமல் மாங்காய் பறித்துள்ளனர்.

அப்போது திடீரென சிறுவன் சத்யம் குமார் தலையில் ஏதோ ஒரு பொருள்தாக்கி அவன் தூக்கிவீசப்பட்டான். இதைக் கண்ட மற்ற சிறுவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று நடந்த சம்பவத்தை கிராமத்தில் உள்ள மக்களிடமும், சிறுவனின் பெற்றோரிடமும் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து சிறுவனை ககாரியா மாவட்ட மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால், அங்குச் சிறுவன் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால், ஏற்கெனவே இறந்துவிட்டான் என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இதையடுத்து, சிறுவனின் பெற்றோர், கிராமத்தினர் சிறுவனின் உடலை வாங்காமல்,அந்தத் தோட்டத்தில் உள்ள காவல்காரர் பாதோ சவுத்ரிதான் தனது மகனைத் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அவரைக் கைது செய்ய வேண்டும் என்று போலீஸிடம் வலியுறுத்தினார்கள்.

இது குறித்து சிறுவனின் தந்தை மகுனி யாதவ் கூறுகையில், ‘‘என் மகன் செய்த ஒரே குற்றம் தெரியாமல் மாங்காய் பறித்ததுதான். அதற்கான விலை அவன் உயிர்தானா. என் மகனைச் சுட்டுக்கொன்ற மாந்தோப்பின் தோட்டக்காரர் பாதோ சவுத்ரியை கைது செய்ய வேண்டும்’’ என்று வேதனையுடன் தெரிவித்தார்.

சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கில் கிராமக்கள் திரண்டுவந்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தினார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் அவர்கள் கலைந்து சென்றனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ‘‘சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்தில், இருவரைக் கைது செய்துள்ளோம். தோட்டத்தின் காவல்காரர் தப்பி ஓடிவிட்டார்.அவரைத் தேடி வருகிறோம்’’ என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x