Published : 23 Jun 2018 08:08 AM
Last Updated : 23 Jun 2018 08:08 AM

காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்தவும், திட்டங்களை செயல்படுத்தவும் கட்சி தலைவர்களுடன் ஆளுநர் ஆலோசனை

அனைத்து கட்சிகளின் தலைவர்களுடன் காஷ்மீர் ஆளுநர் என்.என்.வோரா, ஸ்ரீநகரில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி, பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. கடந்த 19-ம் தேதி பாஜக ஆதரவை வாபஸ் பெற்றதால் முதல்வர் மெகபூபா முப்தி பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து கடந்த 20-ம் தேதி அங்கு ஆளுநர் ஆட்சி அமல் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஆளுநர் என்.என்.வோரா, ஸ்ரீநகரில் நேற்று அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தினார். இதில் மக்கள் ஜனநாயக கட்சி மூத்த தலைவர் திலாவர் மிர், பாஜக மூத்த தலைவர் சத் சர்மா, தேசிய மாநாட்டு கட்சி துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா, காங்கிரஸ் மாநில தலைவர் ஜி.ஏ.மிர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆளுநரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி விஜய குமார், மாநில காவல் துறை தலைவர் எஸ்.வி.வைத் உள்ளிட்டோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் காஷ்மீர் மாநிலத்தின் பாதுகாப்பு நிலவரம் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த பாதுகாப்பு படைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று ஆளுநரின் ஆலோசகர் விஜயகுமார் அறிவுறுத்தினார். காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த அனைத்து கட்சிகளும் வேறுபாடுகளை மறந்து ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று ஆளுநர் கேட்டுக் கொண்டார்.

என்எஸ்ஜி வீரர்கள் முகாம்

காஷ்மீர் மாநிலத்தின் பாதுகாப்புப் பணியில் தேசிய பாதுகாப்பு படையையும் (என்எஸ்ஜி) ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த படை ஸ்ரீநகர் அருகேயுள்ள ஹம்ஹாஹாவில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை முகாமில் தீவிர பயிற்சி பெற்று வருகிறது. அங்கு சுமார் 100 என்எஸ்ஜி வீரர்கள் முகாமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆளுநருடன் மெகபூபா சந்திப்பு

காஷ்மீர் ஆளுநர் அலுவலக செய்தித் தொடர்பாளர் நேற்று கூறியதாவது:

முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு முடிவுறாத திட்டங்கள், மாநிலத்தின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆளுநர் என்.என்.வோராவிடம் ஆலோசனை நடத்தினார்.

இந்தச் சந்திப்பின் போது மாநிலத்தின் வளர்ச்சிக்கு அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக நல இயக்கங்களும் ஒன்று சேர்ந்து பாடுபடவேண்டும் என்று மெகபூபாவிடம் ஆளுநர் வலியுறுத்தினார்.

இவ்வாறு ஆளுநர் அலுவலக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

காஷ்மீரில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு ஆளுநர் வோராவை, முதல்வர் மெகபூபா முப்தி முதல்முறையாக சந்தித்துப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x