Last Updated : 23 Jun, 2018 08:05 AM

 

Published : 23 Jun 2018 08:05 AM
Last Updated : 23 Jun 2018 08:05 AM

ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்த பின் காஷ்மீரில் முதல்முறையாக மோதல்: ஐஎஸ் தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் கடந்த 20-ம் தேதி ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்த பிறகு நேற்று முதல் முறையாக நிகழ்ந்த மோதல் சம்பவத்தில், ஐஎஸ் தீவிரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் போலீஸ் காவலர் ஒருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.

தெற்கு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம், ஸ்ரீகுப்வாரா தாலுகாவில் உள்ள கிராம் என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத் தகவல்கள் கிடைத்தன. இதன் பேரில் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டை பாதுகாப்பு படையினர் நேற்று அதிகாலையில் சுற்றி வளைத்தனர். அப்போது தீவிரவாதிகள் சுட்டதில் ஆஷிக் ஹுசேன் என்ற போலீஸ் காவலரும், முகம்மது யூசுப் ரத்தேர் (53) என்ற உள்ளூர்வாசியும் உயிரிழந்தனர்.

இதையடுத்து பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மோதலின்போது இடையில் சிக்கிய பொதுமக்கள் சிலரும் காயமடைந்தனர்.

கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவர், ஜம்மு காஷ்மீரில் செயல்படும் ஐஎஸ் (ஐஎஸ்ஜேகே) அமைப்பின் தலைவர் தாவூது அகமது சோபி (33) எனத் தெரியவந்தது. ஸ்ரீநகரை சேர்ந்த இவர் பல்வேறு கொலைகள், கல்வீச்சு சம்பவங்களில் தொடர்புடையவர்.

மற்ற மூவரும் ஆதில் ரஹ்மான் பட், முகம்மது அஷ்ரப் இட்டூ, மஜீத் மன்சூர் தார் என அடையாளம் காணப்பட்டனர். இவர்களும் ஐஎஸ்ஜேகே உறுப்பினர்கள் எனவும் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் 2 மாத கால அமர்நாத் யாத்திரை வரும் 28-ம் தேதி தொடங்கவுள்ளது. இதனால் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டது பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

தீவிரவாதிகளுடன் நேற்று மோதல் நடந்தபோது, பாதுகாப்பு படையினர் மீது உள்ளூர் இளைஞர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். அவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் சிலர் காயமடைந்தனர்.

மோதல் சம்பவத்தை தொடர்ந்து வதந்தி பரவுவதை தடுப்பதற்காக ஸ்ரீநகர், அனந்தநாக், புல்வாமா ஆகிய மாவட்டங்களில் மொபைல், இன்டெர்நெட் சேவையை போலீஸார் நேற்று முடக்கினர். சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்கான முன்னெச்சரிக்கையாக இச்சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x