Published : 23 Jun 2018 07:54 AM
Last Updated : 23 Jun 2018 07:54 AM

லால் பகதூர் சாஸ்திரியின் மரணம் குறித்த ரகசிய தகவல்களை வெளியிட வேண்டும்: மகன் அனில் சாஸ்திரி வலியுறுத்தல்

முன்னாள் இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மரணம் தொடர்பான ரகசியத் தகவல்களை வெளியிட வேண்டும் என்று அவரது மகனும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அனில் சாஸ்திரி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, ஹரியாணா தலைநகர் சண்டீகரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

எனது தந்தை லால் பகதூர் சாஸ்திரியின் மரணத்தில் பல மர்மங்கள் மறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது மரணம் இவ்வாறு ஏற்பட்டிருக்கக் கூடும் என்று பல யூகக் கருத்துகளும் நிலவி வருகின்றன. நாட்டின் முன்னாள் பிரதமர் என்ற வகையில், அவரது மரணம் குறித்த உண்மைத் தகவல்களை வெளியிட வேண்டியது அரசின் கடமையாகும்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின்போதும், இந்தத் தகவல்களை அரசிடம் கோரியிருந்தேன். ஆனால், அவை ரகசியமானவை எனக் கூறி அவற்றை வெளியிட அப்போதைய காங்கிரஸ் அரசு மறுத்துவிட்டது. ஆதலால், எனது தந்தையின் மரணத்தில் நிலவும் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அந்த ஆவணங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும். இவ்வாறு அனில் சாஸ்திரி கூறினார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே 1965-ம் ஆண்டு நடைபெற்ற போருக்கு பிறகு, இரு நாடுகள் இடையே அமைதியை ஏற்படுத்துவதற்கான கூட்டம், அதற்கு அடுத்த ஆண்டு உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டில் நடைபெற்றது. இதில், அப்போதைய இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியும், பாகிஸ்தான் பிரதமர் முகமது ஆயுப் கானும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் தாஷ்கண்ட் ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், லால் பகதூர் சாஸ்திரி மரணமடைந்தார். மாரடைப்பால் அவர் இறந்ததாக கூறப்பட்டபோதிலும், அவரது உறவினர்கள் அதனை ஏற்கவில்லை. மேலும், அவரது மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையையும் அரசு இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x