Last Updated : 23 Jun, 2018 07:22 AM

 

Published : 23 Jun 2018 07:22 AM
Last Updated : 23 Jun 2018 07:22 AM

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அடுத்தகட்ட நடவடிக்கை: காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்கள் நியமன‌ம்; ஒழுங்காற்று குழுவுக்கும் உறுப்பினர்களை நியமித்து மத்திய அரசு ஆணை பிறப்பித்தது

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைத்து மத்திய அரசு நேற்று ஆணை பிறப்பித்துள்ளது.

கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கை விசாரித்த நடுவர் மன்றம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வும் தமிழகத்துக்கு 192 டிஎம்சி நீர் வழங்கவும் கடந்த 2007-ல் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகா, கேரள மாநிலங்கள் மேல்முறையீடு செய்தன. 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த இவ்வழக்கில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பை அளித்தது.

அதில், “தமிழகத்துக்கு வழங்கப்பட்ட காவிரி நீரின் அளவை 192 டிஎம்சியில் இருந்து 177.25 டிஎம்சி ஆக குறைத்தது. கர்நாடகாவுக்கு 284.75 டிஎம்சி நீரும் கேரளாவுக்கு 30 டிஎம்சி நீரும் புதுச்சேரிக்கு 7 டிஎம்சி நீரும் வழங்க வேண்டும். இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த 6 வாரங்களுக்குள் செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும்” என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசு கர்நாடக தேர்தல் (மே 12-ம்தேதி) காரணமாக இதனை நிறைவேற்றாமல் இழுத்தடித்தது.

பின்னர் வரைவு அறிக்கை தாக் கல் செய்யப்பட்டதை அடுத்து உச்ச நீதிமன்றம் மே 18-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், “வரைவு அறிக்கையின்படி, மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகிய 2 அமைப்புகளையும் ஜூன் மாதத்துக்குள் அமைக்க வேண்டும். மாநிலங்களுக்கு இடையேயான நீர் பங்கீடு, ஆய்வுகள் மேற்கொள்வது, அணைகளை திறப்பது, இறுதி முடிவு எடுப்பது உள்ளிட்ட அதிகாரங்கள் ஆணையத்துக்கே இருக்க வேண்டும். இந்த தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்” என உத்தரவிட்டது.

நீர்வளத் துறை நடவடிக்கை

இதையடுத்து மத்திய நீர்வளத்துறை மற்றும் ஆற்று மேம்பாட்டு துறை அமைச்சகம் கடந்த 1-ம் தேதி மாநிலங்களுக்கு இடையே யான நதிநீர் பங்கீட்டு சட்டம் 6 (ஏ) 1956-ன்படி, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, 4 மாநிலங்களும் இந்த அமைப்புகளின் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் பெயர்களை பரிந்துரைக்க வேண்டும் என அறிவித்தது. மேலும் இதுதொடர்பான அரசாணையை மத்திய அரசிதழிலும் வெளியிட்டது.

இதையடுத்து தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 3 மாநில அரசுகளும் தங்கள் மாநிலங்களின் சார்பாக காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற் றில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் பெயர்களை மத்திய அரசுக்கு அனுப்பின. ஆனால் கர்நாடக அரசு மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, உறுப்பினர்களின் பெயர்களையும் இதுவரை அனுப் பவில்லை.

டெல்லியில் ஆணையம்

இந்நிலையில் மத்திய நீர்வளத்துறை நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி நதி நீர் பங்கீட்டை செயல்படுத்தும் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, 9 உறுப்பினர்களைக் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மத்திய நீர்வளத்துறை ஆணையத் தலைவர் மசூத் ஹூசைன் (கூடுதல் பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரின் கீழ் மத்திய நீர்வளத் துறை ஆணையத்தின் தலைமை பொறியாளர் நவீன் குமார், மத் திய வேளாண் ஆணையத்தின் ஆணையர் ஆகியோர் நிரந்தர‌ உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய பொதுப்பணித் துறையின் இணை செயலர், மத் திய வேளாண் நலத்துறை இணை செயலர் பகுதி நேர உறுப்பினராகவும் இருப்பார்கள்.

இதேபோல, கேரளா சார்பில் அம்மாநில நீர்வளத்துறை செய லர் டிங்கு பிஸ்வால், தமிழ்நாடு சார்பில் அம்மாநில பொதுப்பணித்துறை முதன்மை செயலர் எஸ்.கே.பிரபாகர், புதுச்சேரி சார் பில் அம்மாநில பொதுப்பணித்துறை ஆணையர் அன்பரசு மற் றும் கர்நாடக அரசின் நீர்வளத்துறை செயலர் (பெயர் குறிப்பிடவில்லை) ஆகியோர் பகுதி நேர உறுப்பினர்களாக செயல்படுவார்கள். மேலாண்மை ஆணையத் தின் செயலராக மத்திய நீர்வளத்துறையின் தலைமை பொறியா ளர் ஏ.எஸ்.கோயல் இருப்பார். இந்த ஆணையம் டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும்.

ஒழுங்காற்று குழு

இதேபோல 9 உறுப்பினர்களைக் கொண்ட காவிரி நீர் ஒழுங்காற்று குழு தலைவராக மத்திய நீர்வளத்துறை ஆணைய தலைமை பொறியாளர் நவீன்குமார் செயல்படுவார். இவரின் கீழ் கர்நாடக நீர்வளத் துறையின் தலைமை பொறியாளர் (பெயர் குறிப்பிடவில்லை), கேரள அரசின் நீர்வளத்துறை தலைமை பொறியாளர் கே.ஏ.ஜோஷி, புதுச் சேரி அரசின் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சண்முக சுந்தரம், தமிழக அரசின் பொதுப்பணித்துறை (திருச்சி மண்டலம்) தலைமை பொறியாளர் ஆர்.செந் தில் குமார் ஆகியோர் மாநிலங்களின் சார்பில் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

இதேபோல, மத்திய நீர்வளத்துறை மற்றும் வேளாண் துறை யின் சார்பில் தலைமை பொறியாளர்கள் ஏ.எஸ்.கோயல், கிருஷ்ணமுன்னி, நீர்ப்பாசன விஞ்ஞானி மோஹபத்ரா, தோட்டக்கலைத் துறை ஆணையர் (பெயர் குறிப்பிடவில்லை) ஆகியோரும் உறுப்பினர்களாக செயல்படுவார்கள். இந்த காவிரி நீர் ஒழுங்காற்று குழு பெங்களூருவை தலைமையிட மாகக் கொண்டு செயல்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கர்நாடகா ஆலோசனை

காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை அமைத்து உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்ததற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து முதல்வர் குமாரசாமி கூறியதாவது:

காவிரி மேலாண்மை ஆணையத்தின் விதிமுறைகள் குறித்து சட்ட நிபுணர்களுடன் கர்நாடக அரசு ஆலோசித்து வருகிறது. அதில் உள்ள சில விதிமுறைக ளில் கர்நாடக அரசுக்கு உடன் பாடு இல்லை என நாங்கள் மத் திய நீர்வளத்துறையில் தெரிவித்திருந்தோம். அதன் அடிப்படையிலேதான் கர்நாடகா சார்பில் பங்கேற்க உள்ள உறுப்பினர்களின் பெயர்களை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யவில்லை.

எங்கள் மாநில உறுப்பினர்களின் பெயர்களை பரிசீலிக்காமலேயே மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை அமைத்திருப்பது துரதிஷ்டவசமானது. இதுபற்றி சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தி, விரைவில் உரிய முடிவு எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x