Last Updated : 22 Jun, 2018 08:00 PM

 

Published : 22 Jun 2018 08:00 PM
Last Updated : 22 Jun 2018 08:00 PM

‘விவசாயிகள் தற்கொலைதான் இரட்டிப்பாகியுள்ளது; வருமானம் இல்லை’: பாஜகவை விளாசிய சிவசேனா

 

பாஜக ஆட்சிக்கு வந்தபின் விவசாயிகள் தற்கொலைதான் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது, அவர்களின் வருமானம் இரட்டிப்பாகவில்லை என்று மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசை சிவசேனா கட்சி கடுமையாகச்சாடியுள்ளது.

பிரதமர் மோடி, நேற்று முன்தினம் வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் 600 மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுடன் உரையாடினார். அப்போது, வரும் 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்குடன் பட்ஜெட்டில் நிதி அளவை ரூ.2.12 லட்சம் கோடியாக மத்திய அரசு உயர்த்தி உள்ளதாக தெரிவித்தார்.

இது குறித்து சிவசேனா கட்சி தனது அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கத்தில் கடுமையாகச் சாடியுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

இந்தத் தேசத்தை ஆள்பவர்களும், ஆளும் கட்சியும்(பாஜக) மக்களிடம் வாக்குறுதிகளைக் கொடுப்பதில் ஒருபோதும் சோர்வடைவதில்லை. அவர்களின் வாக்குறுதிகள் அனைத்தும் வெற்றுத்தனமாக, வார்த்தைஜாலமாகவே இருக்கிறது. சமீபத்தில் பிரதமர் மோடி விவசாயிகளின் வருமானத்தை 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கிவிடுவேன் என்று வாக்குறுதி அளித்து இருக்கிறார்.

இது ஒன்றும் புதிய வாக்குறுதி அல்ல.கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில்கூட இதே போன்று வாக்குறுதி அளித்து இருந்தது பாஜக. அதன் மூலமே மத்தியில்ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. பிரதமர் மோடி மறுபடியும் பழைய ஒலிநாடாவை (ஆடியோ கேஸட்) பாடவிடுகிறார்.

மத்தியில் பாஜகவை ஆட்சியில் அமரவைத்தவர்கள் தேசத்தின் விவசாயிகள். ஆனால், இன்று அந்தக் கட்சியை ஆட்சியில் அமரவைத்துவிட்டு, அவர்கள் சுயநினைவற்ற(கோமா) நிலைக்குச் சென்றுவிட்டார்கள்.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்குப் பதிலாக அவர்களின் நிலைமைதான் மோசமடைந்து இருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்தபின், விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகவில்லை, தற்கொலைதான் இரட்டிப்பாகியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கவும், இரட்டிப்பாக்கவும் என்னென்ன நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிக்க முடியுமா. அவர்களுக்கு நல்லகாலம் வந்துவிட்டதா என்று பார்க்கலாம்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல்வேறு கொள்கை முடிவுகளை எடுக்கிறது, ஆனால், அது ஏன் நிஜத்தில் அமலாவதில்லை. விவசாயிளுக்கு விளையா பொருட்களுக்கான உற்பத்திச் செலவு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஆனால், அந்த விளைபொருட்களை விற்பனைக்குக் கொடுக்கும் போது நியாயமான விலை கிடைக்கவில்லை. இதனால், விவசாயிகள் மனம்நொந்து போகிறார்கள்.

வங்கிகள் விவசாயிகளுக்கு கடன் உதவியும் அளிப்பதில்லை. தொழில் செய்பவர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும்தான் சிவப்பு கம்பளம் விரிக்கின்றன வங்கிகள். ஆனால், விவசாயிகள் வங்கிக்கு நடையாய் நடந்தாலும் கடன் கிடைப்பதில்லை. இது வேறுபாட்டுடன் நடத்தும் செயலாகும். விவசாயிகளின் வருமானம் உயர்வதற்குப் பதிலாக தற்கொலை அதிகரித்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து இப்போது வரை 40 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.

இவ்வாறு சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x