Last Updated : 22 Jun, 2018 06:06 PM

 

Published : 22 Jun 2018 06:06 PM
Last Updated : 22 Jun 2018 06:06 PM

அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் வழக்கத்துக்கு மாறாக டெபாசிட் வரவில்லை: நாபார்டு வங்கி விளக்கம்

பணமதிப்புநீக்கத்தின்போது அமகதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் வழக்கத்துக்கு மாறாகச் செல்லாத ரூபாய் நோட்டுகள் ஏதும் டெபாசிட் செய்யப்படவில்லை. கேஒய்சி விதிமுறைப்படியே அனைத்தும் நடந்தது என்று நபார்டு வங்கி விளக்கம் அளித்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு பணமதிப்புநீக்கத்தின் போது, குஜராத்தில் உள்ள அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியின் இயக்குநர்களில் ஒருவராக பாஜக தலைவர் அமித் ஷா இருந்து வருகிறார். கடந்த 2000-ம் ஆண்டு இந்த வங்கியின் தலைவராக இருந்த நிலையில் இப்போது இயக்குநர்களில் ஒருவராகவே இருந்து வருகிறார்.

இந்த அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் கடந்த 2016, நவம்பர் 9-ம் தேதி முதல் 14-ம் தேதிவரை செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மட்டும் ரூ.745.59 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. ஆனால், 14-ம் தேதிக்குப் பின் கூட்டுறவு வங்கியில் யாரும் பணம் கொடுத்து மாற்றக்கூடாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தகவலை ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு நபார்டு வங்கியின் தலைவர் சரவணவேல் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், நபார்டு வங்கி இந்த டெபாசிட் குறித்து பல்வேறு விளக்கங்களை இன்று அளித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

குஜராத்தில் உள்ள அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் பணமதிப்பு நீக்கத்தின்போது செல்லாத ரூ.500 ரூ.1000 நோட்டுகள் வழக்கத்துக்கு மாறாக ஏதும் டெபாசிட் செய்யப்படவில்லை. ரிசர்வ் வங்கியின் கேஒய்சி விதிப்படியே பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

அகமபாதாப் மாவட்ட கூட்டுறவு வங்கியில் மொத்தம் 17 லட்சம் கணக்குதாரர்கள் உள்ளனர். அதில் 1.6 லட்சம் வாடிக்கையாளர்கள் சராசரியாக ரூ.46ஆயிரத்து 795 டெபாசிட் செய்தனர். ஒட்டுமொத்த கணக்குதாரர்களில் 9.37 சதவீதம் வாடிக்கையாளர்களே செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றினார்கள்.

98.94 சதவீதம் வாடிக்கையாளர்கள் ரூ.2.5 லட்சத்துக்குக் குறைவாகவே டெபாசிட் செய்தனர் மற்றும் செல்லாத ரூபாய்களைக் கொடுத்து பரிமாற்றம் செய்தனர். கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி முதல் 14-ம் தேதிவரை 1.60 லட்சம் வாடிக்கையாளர்கள் மூலம் ரூ.746 கோடி டெபாசிட் வந்தது உண்மைதான். இது வங்கியின் டெபாசிட்களில் 15சதவீதம் மட்டுமே. இந்த டெபாசிட்கள் அனைத்தும் விதிமுறையின்படியே நடந்துள்ளது.

குஜராத்தில் உள்ள கூட்டுறவுவங்கிகளில் செய்யப்பட்ட டெபாசிட்களைக் காட்டிலும், மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கிகளில் செய்யப்பட்ட டெபாசிட்தான் அதிகமாகும்.

அகமதாபாத் மாவட்டகூட்டுறவு வங்கியில் வர்த்தக அளவு என்பது ரூ.9 ஆயிரம் கோடியாகும். நாட்டில் உள்ள மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் முதல் 10 இடங்களில் இந்த வங்கி இடம் பெற்றுள்ளது. சமீபத்தில் இந்த வங்கிக்குச் சிறப்பாக செயல்பட்டதற்காக விருதும் வழங்கப்பட்டுள்ளது. ஆதலால், வங்கியில் செய்யப்பட்ட டெபாசிட்கள் விதிமுறைப்படியே நடந்துள்ளன.

இவ்வாறு நபார்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x