Last Updated : 22 Jun, 2018 05:12 PM

 

Published : 22 Jun 2018 05:12 PM
Last Updated : 22 Jun 2018 05:12 PM

பணமதிப்பு நீக்கத்துக்கு பின் குஜராத்தின் 11 வங்கிகளில் 5 நாட்களில் ரூ.3,118 கோடி செல்லாத ரூபாய் டெபாசிட் செய்த பாஜகவினர்: காங்கிரஸ் அதிர்ச்சித் தகவல்

கடந்த 2016-ம் ஆண்டு பணமதிப்பு நீக்கத்துக்குப்பின் 5 நாட்களில் குஜராத்தின் 11 வங்கிகளில் பாஜகவினர் ரூ.3 ஆயிரத்து 118 கோடி செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை டெபாசிட் செய்துள்ளனர் என்று காங்கிரஸ் கட்சி புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் அதிகமாக பாஜக ஆளும் மாநிலங்கள், கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் உள்ள வங்கிகளில்தான் அதிகமாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.அதில் அதிகமாக குஜராத்தில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று காங்கிரஸ்கட்சி தெரிவித்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மனோரஞ்சன் ராய் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பணமதிப்பு நீக்கத்தின் போது வங்கிகளில் பெறப்பட்ட ரூபாய் விவரங்கள் குறித்து கேட்டிருந்தார். அவருக்கு நபார்டு வங்கியின் தலைமை பொதுமேலாளர் எஸ் சரவணவேல் பதில் அளித்துள்ளார்.

அதில், கடந்த 2016, நவம்பர் 8-ம் தேதி பணமதிப்பு நீக்க நடவடிக்கையைப் பிரதமர் மோடி கொண்டு வந்தார். அதன்படி நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன.

அப்போது குஜராத்தில் உள்ள அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியின் இயக்குநர்களில் ஒருவராக பாஜக தலைவர் அமித் ஷா இருந்து வருகிறார் இந்த அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் கடந்த 2016, நவம்பர் 9-ம் தேதி முதல் 14-ம் தேதிவரை செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மட்டும் ரூ.745.59 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. ஆனால், 14-ம் தேதிக்குப் பின் கூட்டுறவு வங்கியில் யாரும் பணம் கொடுத்து மாற்றக்கூடாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது குறிப்பிடத்தக்கது எனத் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா இன்று டெல்லியில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி கொண்டு வந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கைதான் நாட்டிலேயே மிகப்பெரிய ஊழலாகும். ஏராளமான கறுப்புப்பணம் வெள்ளையாக பாஜகவினரால் மாற்றப்பட்டது.

பாஜக ஆளும் மாநிலங்கள்,கூட்டணி ஆட்சி நடக்கும்மாநிலங்கள், ஆதரவு பெற்ற மாநிலங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் செல்லாத ரூ.500, ரூ1000 நோட்டுகள் ஏராளமாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. இதைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிக்கொண்டுவந்துள்ளோம்.

பாஜக தலைவர் அமித் ஷா இயக்குநராக இருக்கும் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டு 5 நாட்களில் ரூ.745.58 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டு 5 நாட்களில் குஜராத்தில் மட்டும் 11 கூட்டுறவு வங்கிகளில் ரூ.3 ஆயிரத்து 118.51 கோடி செல்லாத ரூ.500, ரூ1000 நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. பாஜக ஆளும் மாநிலங்கள், கூட்டணி ஆட்சி நடக்கும் மாநிலங்கள், ஆதரவு பெற்ற மாநிலங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் அந்த 5 நாட்களில் ஒட்டுமொத்தமாக ரூ.14 ஆயிரத்து 293.71 கோடி செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன.

பணமதிப்பு நீக்கம் கொண்டுவந்த 5 நாட்களில் கூட்டுறவு வங்கிகளில் மொத்தம் ரூ.22ஆயிரத்து 270 கோடி செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டது. இதில் ரூ.14 ஆயிரத்து 293 கோடி, பாஜக ஆளும் மாநிலங்கள், கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் இருந்து டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.7 ஆயிரத்து 911 கோடி பாஜக ஆளாத பிற மாநிலங்களில் இருக்கும் கூட்டுறவு வங்கிகளில் இருந்து டெபாசிட் செய்யப்பட்டவையாகும்

இந்த பணமதிப்பு நீக்கம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படுவது மிகவும் அவசியமாகும். பெரும்பாலான பணம் கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அந்தக் கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் பாஜகவினரால் கட்டுப்படுத்தப்பட்டு தலைவர்களாக, இயக்குநர்களாக இருக்கும் அமைப்பாகும்.

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் தாமாக முன்வந்து குஜராத்தில் 11 கூட்டுறவு வங்கிகளில் ரூ.3,118 கோடி செல்லாத நோட்டு எப்படி டெபாசிட் செய்யப்பட்டது என்பதை விளக்க வேண்டும்.

இவ்வாறு ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாஜக தலைவர் அமித் ஷாவை கிண்டல் செய்து ட்விட் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

Congress-president-Rahul-Gandhi-Kajpgகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி100 

வாழ்த்துக்கள் அமித் ஷா, நீங்கள் இயக்குநராக இருக்கும் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கிதான் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றும் போட்டியில் முதல் பரிசைப் பெற்றுள்ளது. 5 நாட்களில் ரூ.750 கோடி செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றி இருக்கிறது. லட்சக்கணக்கான இந்தியர்கள் வாழ்க்கையை அழித்ததுஅந்த பணமதிப்புநீக்க நடவடிக்கைதான். உங்கள் சாதனைக்கு வணங்குகிறேன்.

இவ்வாறு ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x