Published : 22 Jun 2018 12:14 PM
Last Updated : 22 Jun 2018 12:14 PM

தெலுங்கானாவில் ‘காணாமல் போன’ கிராமங்கள்: மக்கள் தொகை கணக்கெடுப்பில் நடந்த அதிர்ச்சி

எண்ணிக்கையை கணக்கெடுக்கும்போது ஒரு சிலர் விடுபட்டுபோக வாய்ப்பு உண்டு. ஆனால் தெலுங்கானா மாநிலத்தில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சில கிராமங்களையே அதிகாரிகள் விட்டு விட்டனர். இதனால் அரசின் நலத்திட்ட உதவிகள் ஏதும் கிடைக்காமல் அந்த கிராம மக்கள் அவதிப்பட்டுள்ளனர்.

ஆந்திராவில் இருந்து பிரிக்கப்பட்டு 2014-ம் ஆண்டு தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு மாவட்டங்களை தனியாக சீரமைக்கும் பணிகளை 2016-ம் ஆண்டில் அம்மாநில அரசு மேற்கொண்டது.

அப்போது 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தகவல்களை கொண்டு மாவட்டங்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டன. அப்போது விக்கர்பாத் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் புதிதாக இருப்பதை பார்த்து அதிகாரிகள் அதிர்ந்து போயினர். தங்கள் மாநிலத்தின் புதிய வரையறை கணக்கெடுப்பிலும் அந்த கிராமங்கள் இல்லை.

பிறகு ஆந்திர மாநிலத்தின் முந்தைய கணக்கெடுப்பு மற்றும் தாலுகா வரையறையை பார்த்தபோது இந்த கிராமங்கள் இருப்பது உறுதி செய்யப்பபட்டன. இந்த கிராமங்கள் குறித்த விவரங்கள் இல்லாததால் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் இந்த கிராமத்திற்கு சென்றடையவில்லை. இந்த கிராமங்களை கணக்கில் எடுத்து எந்த நிதியும் இதுவரை ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இதையடுத்து இந்த கிராமங்களில் உடனடியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு புதிதாக அரசாணை வெளியிடப்பட்டது. பிரச்சினை தீர்ந்தது என்று அதிகாரிகள் இருந்த நிலையில், இதேபோன்ற பிரச்சினை தற்போது பல்வேறு மாவட்டங்களிலும் எழுந்துள்ளது. அடிலாபாத், மெஹபூப் நகர், மஞ்சேரியல் என பல மாவட்டங்களிலும் ஏராளமான கிராமங்கள் கணக்கெடுப்பில் விடுப்பட்டுள்ளன. ஏறக்குறைய 400க்கும் மேற்பட்ட கிராமங்கள் விடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த கிராமங்களில் அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றுள்ளன. அரசின் நிதியும் தொடர்ந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கிராமங்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பில் மட்டுமே விடுபட்டுள்ளன. இதனால் பிரச்சினை பெரிய அளவில் எழவில்லை. இருப்பினும் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை எண்ணிக்கையில் 400க்கும் மேற்பட்ட கிராம மக்களின் எண்ணிக்கை விடுபட்டுள்ளதால் அதனை சேர்ப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x