Last Updated : 22 Jun, 2018 07:45 AM

 

Published : 22 Jun 2018 07:45 AM
Last Updated : 22 Jun 2018 07:45 AM

வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டம் வேண்டும்; விவசாயக் கடன் தள்ளுபடி தீர்வாகாது: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேச்சு

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டக் கொள்கைகளை அரசு வகுக்க வேண்டும்; அதனை விடுத்து, விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வது என்பது அவர்களுக்கு நிரந்தரத் தீர்வை வழங்காது என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தேசிய விவசாயக் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கை தொடங்கி வைத்து வெங்கய்ய நாயுடு பேசியதாவது:

உலக அளவில் மிகப்பெரிய விவசாய நாடாக இந்தியா விளங்குகிறது. விவசாயத்தை பிரதான தொழில்களாக கொண்டிருக்கும் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் இன்றளவும், நம் நாட்டின் விவசாயிகள் பொருளாதாரத்திலும், சமூக நிலையிலும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றனர்.

இந்த நிலை மாற வேண்டும் என்றால், விவசாயத் துறையிலும், வேளாண் தொழிலிலும் பல நல்ல மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், அவர்களின் வருமானத்தை பெருக்குவதற்காகவும் புதிய கொள்கைகளை அரசு வகுக்க வேண்டும். விவசாயிகள் தங்களின் விளைப்பொருட்களை லாபகரமாக சந்தைப் படுத்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

அதனை விடுத்து, விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதால் மட்டும் எந்தப் பலனும் ஏற்பட்டுவிடாது. மாறாக, அது, வேளாண் துறைக்கும், விவசாயிகளுக்கும் எதிர்காலத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

அதேபோல், வேளாண்துறை மேம்பட வேண்டுமெனில், விவசாயிகளும் தங்களைக் காலத்துக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொள்ள வேண்டும். பயிர்த் தொழில் ஒன்றை மட்டுமே நம்பி இருக்காமல், கூடவே கால்நடை வளர்ப்பு, பால்பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட துணைத்தொழில்களிலும் ஈடுபட வேண்டும். இது, அவர்களின் வருமானத்தைப் பெருக்குவதுடன் மட்டுமல்லாமல் பேரிடர் காலங்களில் அவர்களுக்கு பக்கபலமாகவும் அமையும். இவ்வாறு வெங்கய்ய நாயுடு பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x