Last Updated : 22 Jun, 2018 07:45 AM

 

Published : 22 Jun 2018 07:45 AM
Last Updated : 22 Jun 2018 07:45 AM

கர்நாடக மாநிலத்தில் புதுமண தம்பதி ஜேசிபி வாகனத்தில் உற்சாக ஊர்வலம்: சமூக வலைதளங்களில் பரவுகிறது

கர்நாடகாவில் புதுமண தம்பதி ஜேசிபி வாகனத்தில் அமர்ந்து திருமண ஊர்வலம் சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் தென் கனரா மாவட்டம் புத்தூர் அருகேயுள்ள பர்புஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சேத்தன் (27). ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றும் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மமதா (22) என்ற பெண்ணுக்கும் கடந்த திங்கள்கிழமை திருமணம் நடைபெற்றது.

காரில் செல்ல மறுப்பு

திருமணம் முடிந்த பின்னர் மாப்பிள்ளை சேத்தன் தனது புது மனைவியை அலங்கரிக்கப்பட்ட காரில் அழைத்துச்செல்ல மறுத்துள்ளார்.

பின்னர் தனது ஜேசிபி வாகனத்தை அலங்கரித்து, அதில் மனைவி மமதாவுடன் ஊர்வலமாக செல்ல முடிவெடுத்துள்ளார். இதற்கு முதலில் மமதா தயங்கியபோது, அவரை தேற்றி ஜேசிபி வாகனத்தில் அமர வைத்து ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளார். இதனை ஊரில் இருந்த பொதுமக்கள் அனைவரும் வியப்புடன் வேடிக்கை பார்த்துள்ளனர்.

நண்பர்களும், உறவினர்களும் கிண்டல் செய்ததால் புதுமண தம்பதிகள் வெட்கப்பட்டவாறே ஊர்வலத்தை நிறைவு செய்துள்ளனர்.

இந்த வித்தியாச திருமண ஊர்வலத்தின் புகைப்படம் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. ஜேசிபி வாகனத்தை பயன்படுத்திய புதுமண தம்பதிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து புதுமாப்பிள்ளை சேத்தன் கூறுகையில், ‘‘இந்த ஜேசிபி வாகனத்தை மிகவும் கஷ்டப்பட்டு வாங்கினேன். இப்போது என் குடும்பத்துக்கே இந்த வாகன‌ம்தான் சோறு போடுகிறது. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் எனது திருமண ஊர்வலத்துக்கு ஜேசிபியை பயன்படுத்தினேன். இதற்காக காரை போல எனது வாகனத்தை நண்பர்களுடன் சேர்ந்து அலங்கரித்தேன்''என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x