Published : 16 Jun 2018 12:33 PM
Last Updated : 16 Jun 2018 12:33 PM

விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் மத தீவிரவாத அமைப்புகள்: அமெரிக்க சிஐஏ அறிக்கை

 விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள அமைப்புகள் ஆகியவை மத தீவிரவாத அமைப்புகள் என்று அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ , வேர்ல்டுபேக்ட் புக் என்ற அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆனால், அமெரிக்க சிஐஏவின் அறிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த விஎச்பி, பஜ்ரங் தளம் ஆகியவை, மத்திய அரசு இதில் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

அமெரிக்க உளவு அமைப்பான மத்திய புலனாய்வு அமைப்பு(சிஐஏ) சமீபத்தில் வேர்ல்டு பேக்ட்புக் என்ற அறிக்கையை வெளியிட்டது. அமெரிக்க உளவு அமைப்பு ஆண்டுதோறும் ‘உலக உண்மைத் தகவல்நூல்’ என்ற அறிக்கையை வெளியிடுகிறது.

இதில் பல்வேறு நாடுகளின் வரலாறு, அங்குச் செயல்படும் அமைப்புகள், மத அமைப்புகள், அரசியல் அமைப்புகள், மக்கள், அரசுகள், கட்சிகள், பொருளாதாரம், எரிசக்தி, புவியியல், தகவல்தொடர்பு, போக்குவரத்து, ராணுவம் உள்ளிட்ட 267 நாடுகள் தொடர்பான விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த வேர்ல்டு பேக்ட்புக், கடந்த 1962-ம் ஆண்டில் இருந்து அச்சிடப்பட்டு வந்தாலும், கடந்த 1975-ம் ஆண்டில் இருந்தே மக்களின் பார்வைக்கு வந்தது. அமெரிக்க எம்பிக்களுக்கு உதவுவதற்காக இந்த நூல் அச்சிடப்படுகிறது.

அந்த வகையில், இந்தியாவில் விஸ்வ இந்து பரிஷத்(பிஎச்பி), பஜ்ரங் தளம் ஆகியவை மதரீதியான தீவிரவாத அமைப்புகள் என தெரிவித்துள்ளது.

அதேசமயம், அரசியல் ரீதியாக பின்புலத்தில்இருந்து பல்வேறு நெருக்கடிகளை அரசுக்கு அளிக்கும் குழுக்கள், ஆனால், தேர்தலில் போட்டியிடாத அமைப்புகள் என்ற அடிப்படையில், ஆர்எஸ்எஸ் அமைப்பைப் பட்டியலிட்டுள்ளது. மேலும், காஷ்மீரின் ஹுரியத் மாநாட்டுக் கட்சி, ஜாமியாத் உலேமா இ ஹிந்த் ஆகியவை அரசியல் நெருக்கடி தரும் அமைப்புகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆர்எஸ்எஸ் அமைப்பு தேசியவாத அமைப்பு என்றும், ஹூரியத் மாநாட்டுக்கட்சியை பிரிவினைவாத அமைப்பு என்றும், ஜாமியத் உலேமா இ இந்த அமைப்பை மதரீதியான அமைப்பு என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து பாஜகவின் முன்னாள் தேசிய ஒருங்கிணைப்பாளர் சாம்தேவ் கூறுகையில், நாங்கள் அமெரிக்க சிஐஏவின் அறிக்கையை முற்றிலும் நிராகரிக்கிறோம். பஜ்ரங் தளம், பிஎச்பி ஆகியவை தேசியவாத அமைப்புகள் என்பது மக்களுக்குத் தெரியும். விரைவில் சிஐஏ மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

கடும் எதிர்ப்பு

அமெரிக்க உளவு அமைப்பின் அறிக்கைக்கு விஸ்வ இந்து பரிசத் மற்றும் பஜ்ரங் தளஅமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

இது குறித்து பஜ்ரங் தள பொதுச்செயலாளர் சுரேந்திர ஜெயின் கூறுகையில், அமெரிக்க சிஐஏ என்பது இந்தியாவுக்கு விரோதமானது. விஎச்பி அமைப்பு தேசியவாத அமைப்பு, நாட்டுக்காக உழைக்கும் அமைப்பு என்பது மக்களுக்குத் தெரியும். சிஐஏவின் அறிக்கை உண்மைக்குப் புறம்பானது, போலியானது

இந்தியாவுக்கு விரோதமான மனநிலையில் அமெரிக்க சிஐஏவின் அறிக்கை இருக்கிறது. சிஐஏவுக்கு எதிராக விஎச்பி அமைப்பு போராட்டம் நடத்தும். ஒசாமா பின்லேடனை உருவாக்கியதே சிஐஏதான். ஆதலால், எங்களுக்குப் பாடம் கற்பிக்க அமெரிக்க நிறுவனத்துக்கு உரிமை இல்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று கோரிக்கை வைப்போம் என அவர் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x