Last Updated : 10 Jun, 2018 07:29 PM

 

Published : 10 Jun 2018 07:29 PM
Last Updated : 10 Jun 2018 07:29 PM

‘வங்கி மோசடியில் மக்கள் இழந்த பணத்துக்கு பதில் சொல்லுங்கள்’: மத்திய அரசை விளாசிய ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர்

 

பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட அனைத்து வங்கி மோசடியிலும் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது, இதற்கு மத்திய அரசு பொறுப்பேற்று பதில் கூற கடமைப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ஒய்.வி. ரெட்டி கடுமையாகச் சாடியுள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம் கோல்காபூரில் உள்ள சிவாஜி பல்கலைக்கழகத்தில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ஒய்.வி.ரெட்டி பேசினார். 2003- முதல் 2008-ம் ஆண்டுவரை ரிசர்வ் வங்கியின் கவர்னராக ஒய்.வி.ரெட்டி இருந்தார்.

‘வங்கிகளை பாதுகாப்பாக வைத்திருப்பது’ என்ற தலைப்பில் அவர் பேசியதாவது:

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த ஆயிரக்கணக்கான ரூபாய் மோசடி சமீபத்தில் வெளிவந்தது. அது மிகப்பெரிய மோசடி என்பது தெளிவாகத் தெரிந்தது. அப்படி இருக்கும் போது அந்த மோசடிக்கு யார் பொறுப்பேற்க வேண்டும், அந்த மோசடி குறித்து யார் கவலைப்பட வேண்டும்?

இந்த வங்கியின் முதலாளிதான் இந்த இழப்புக்கு பொறுப்பேற்க வேண்டும். அந்த முதலாளி யார்? மத்தியில் ஆளும் அரசுதான் வங்கியின் முதலாளி. அரசின் சார்பில் தொடங்கப்பட்ட வங்கியில் பணத்தை டெபாசிட் செய்தால், பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் வரி செலுத்துவோர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்கிறார்கள். ஆனால், வாடிக்கையாளர்களின் பணத்தை காப்பாற்ற முடியாவிட்டால், அதற்கான விளக்கத்தை மத்திய அரசுதான் அளிக்க வேண்டும்.

பொதுத்துறை வங்கிகளின் பெரும்பாலான பங்குகளை வைத்திருக்கும் அரசுதான் இதுபோன்ற வங்கிமோசடிகள் குறித்து கவலைப்பட வேண்டும். அரசு நியமிக்கும் வங்கியின் இயக்குநர்கள் என்ன செய்கிறார்கள், ஏன் தடுக்கவில்லை என்பதை அறிய வேண்டும்.

தன்னுடைய முதலீட்டை கண்காணிக்க, கட்டுப்படுத்த முடியாத அரசுதான் இதுபோன்ற மோசடிகளுக்கு வருத்தப்பட வேண்டும். ரிசர்வ் வங்கியின் முக்கிய பொறுப்பு என்பது, நிதிமுறையை ஸ்திரப்படுத்துவதும், வாடிக்கையாளர்களின் பணத்தை பாதுகாப்பதும்தான்.

வங்கி முறையில், மக்களின் நம்பிக்கையை காப்பாற்றத் தவறிவிட்டு அதில் இருந்து தப்பிகக்க ரிசரவ் வங்கி முயற்சிக்க முடியாது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடியால், ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வங்கி மோசடியில் தொடர்புடைய சிலருக்கு எதிராக சிபிஐ நடவடிக்கை எடுத்து. அந்த நடவடிக்கை அரசுக்கு ஏற்பட்ட இழப்பின் காரணமாக எடுக்கப்பட்டதா அல்லது வேறு ஏதாவது உள்நோக்கில் எடுக்கப்பட்டதா.

உண்மையில் குற்றம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டார்களா, தண்டிக்கப்பட்டார்களா, போன்ற எந்த கேள்விக்கும் விடையில்லை. ஆனால், வங்கி முறையில் மட்டும் மக்கள் நம்பிக்கையை இழந்து வருகின்றனர். வங்கிகளின் வாராக்கடன் அதிகரிக்கும் போகும் போது, டெபாசிட்தாரர்களின் பணத்தையும், வட்டியையும் குறித்த நேரத்துக்கு வங்கிகளால் அளிக்க முடியாது.

பொதுத்துறை வங்கிகளின் எதிர்காலம் குறித்து தெளிவான நிலைப்பாடு எடுத்து, நாம் பயணிக்க வேண்டும். வங்கியில் டெபாசிட் செய்பவர்களின் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும், வங்கி முறை சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும்

இவ்வாறு ஒய்.வி.ரெட்டி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x