Last Updated : 10 Jun, 2018 07:13 PM

 

Published : 10 Jun 2018 07:13 PM
Last Updated : 10 Jun 2018 07:13 PM

80 நாடுகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தான சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்தை ஷாங்காய் மாநாட்டிலேயே சூசகமாக எதிர்த்த பிரதமர் மோடி

சீனாவில் நடைபெறும் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு உச்சி மாநாட்டில் 8 நாடுகளில் ஒன்றாகக் கலந்து கொள்ள இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி சீனா சென்று பங்கேற்றுள்ளார். இதில் தன் உரையில், 80 நாடுகளுடன் சீனா மேற்கொண்ட ‘பெல்ட் அண்ட் ரோடு’ என்ற மிகப்பெரிய வர்த்தகப் பாதைத் திட்டத்தை இந்தியா ஏற்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி சூசகமாகத் தெரிவித்து விட்டார்.

இந்த 2 நாள் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு நாடுகள் உச்சி மாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்ட தீர்மானத்தில் ரஷ்யா, பாகிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், தாஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு வர்த்தகப் பாதைத் திட்டத்துக்கான தங்கள் உறுதியை மீண்டுமொரு முறை உறுதி செய்தது என்று கூறப்பட்டுள்ளது.

“ஷாங்காய் கூட்டுறவு நாடுகள் கூட்டுறவில் யூரேஸியன் பொருளாதார ஒன்றியம், பெல்ட் அண்ட் ரோடு முயற்சி ஆகியவற்றை உருவாக்குவதற்கான சீனாவின் முயற்சியை உறுப்பு நாடுகள் பாராட்டியுள்ளன. இதன் மூலம் பிராந்திய நாடுகளின் சர்வதேச அமைப்புகளின் பலதரப்பு கூட்டுறவுகளின் அடிப்படை ஆற்றலை ஒன்று திரட்டி பரந்துபட்ட, திறந்த, பரஸ்பரம் பயன் தரக்கூடிய, சமத்துவக் கூட்டுறவு உருவாக்க முடியும்” என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய போது எந்த ஒரு மகா கூட்டுறவு, தொடர்பு வர்த்தகத் திட்டமாயினும் அது ஒவ்வொரு நாட்டின் இறையாண்மையையும் பிராந்திய ஓர்மையையும் மதிப்பதாக இருக்க வேண்டும், ஆகவே அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்றை உறுதி செய்யும் திட்டத்துக்கு இந்தியா தன் முழு ஆதரவையும் அளிக்கும் என்று சூசகமாக இந்தியாவுக்கு இதில் உடன்பாடில்லை என்று தெரிவித்து விட்டார்.

சீன அதிபரின் செல்ல திட்டமான பிஆர்ஐ என்று அழைக்கப்படும் பெல்ட் அண்ட் ரோடு மெகா வர்த்தக இணைப்புத் திட்டத்தில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரப் பாதை பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் வழியாகச் செல்லும். இது இந்தியாவின் இறையாண்மையைப் பாதிக்கும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இந்த பிஆர்ஐ திட்டத்தை சீனா 2013-ல் தென் கிழக்காசியா, மத்திய ஆசியா, வளைகுடாப் பகுதி ஆப்ரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றை நிலம் மற்றும் கடல் மார்க்கமாக இணைக்கும் மெகாத் திட்டமாக அறிவித்தது.

இதற்காக சீனா 126 பில்லியன் டாலர்கள் செலவு செய்யத் தயார் என்று ஜின்பிங் எப்போதோ அறிவித்து விட்டார். ஆனால் இது சீனா தனது வர்த்தகச் செல்வாக்கை உலகளாவியதாக மாற்ற மேற்கொள்ளும் முயற்சி என்ற விமர்சனங்களும் எழுந்தன. இந்தத் திட்டத்துக்காக சுமார் 80 நாடுகள் மற்றும் பல பன்னாட்டு அமைப்புகள் சீனாவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டன.

இந்நிலையில் சீன அதிபர் ஜின்பிங் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர் மோடி, இத்தகைய மெகா வர்த்தகத் தொடர்பு திட்டங்களில் இந்தியாவுக்கு இருக்கும் ஆர்வத்தை வடக்கு-தெற்கு வர்த்தகப் பாதைத் திட்டத்திலும் சஹாபர் துறைமுகம் மற்றும் அஷ்காபட் ஒப்பந்தத்தின் மூலம் காட்டியுள்ளது, “அண்டை நாடுகளுடன் இத்தகைய தொடர்புகளுக்கு இந்தியா முன்னுரிமை வழங்குகிறது. நீண்டகாலம் நீடிக்கக் கூடிய, திறமையான, பிராந்திய இறையாண்மையையும் தனிநாட்டின் ஓர்மையையும் மதிக்கும் எந்த ஒரு தொடர்பு படுத்தும் திட்டத்தையும் நாங்கள் வரவேற்கிறோம்” என்றார் மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x