Published : 10 Jun 2018 05:28 PM
Last Updated : 10 Jun 2018 05:28 PM

‘பேண்ட்டுக்குள் பாம்பு’ ஏறியது கூட தெரியாமல் 30 நிமிடம் பைக் ஓட்டிய இளைஞர் உயிர் தப்பிய அதிசயம்

பேண்ட்டுக்குள் பாம்பு ஏறியது கூடத் தெரியாமல் இளைஞர் 30 நிமிடம் பைக் ஓட்டிச் சென்றுள்ளார். அதன்பின் சுதாரித்து பேண்ட்டை கழற்றி வீசியதால், உயிர் தப்பியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம், கதக் மாவட்டம், நராகுண்ட் நகரைச் சேர்ந்தவர் வீரேஷ் கடேமணி(வயது32). இவர் சின்ன ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மார்க்கெட்டுக்கு சென்று தனது ஹோட்டலுக்கு தேவையான காய்கறிகள் வாங்க வீரேஷ் சென்றுள்ளார். அப்போது, பேண்டுக்குள் ஏதோ குளுகுளு என்று ஊர்வதுபோல் இருந்துள்ளது. தண்ணீர் ஏதும் பேண்டில் பட்டிருக்கும் என நினைத்து பைக் ஓட்டுவதிலேயே வீரேஷ் கவனமாக இருந்துவிட்டார்.

அதன்பின் மார்க்கெட்டுக்கு சென்ற வீரேஷ் தனது ஹோட்டலுக்கு தேவையான காய்கறிகள் அனைத்தையும் வாங்கிவிட்டு, நண்பர்களைச் சந்தித்துவிட்டு திரும்பு உள்ளார். அப்போது பைக்கில் வரும் போது, தனது கால் பகுதியில் பாம்பின் வால்பகுதி இருப்பதைக் கண்டு வீரேஷ் நடுங்கிப்போனார். உடனே பைக்கை கீழே போட்டுவிட்டு, அருகில் உள்ள ஒரு கடைக்குள் சென்று தனது பேண்ட்டை கழற்றி வீசியுள்ளார். அப்போது, அவரின் பேண்ட்டில் இருந்து 2 அடிநீளத்தில் ஒரு பழுப்பு நிறத்தில் பாம்பு ஒன்று ஓடியுள்ளது.

இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் அதை அடிக்க முற்பட்டபோது, அது அருகில் இருந்த கழிவுநீர் தொட்டிக்குள் சென்று மறைந்தது.

இது குறித்து வீரேஷ் கூறுகையில், என்னுடைய ஹோட்டல் சுனந்தா அகஸி பகுதியில் உள்ளது. அங்கு எப்போதும் கூட்டமாகஇருக்கும் என்பதால், எனது பைக்கை அருகில் உள்ள ஒரு மரத்தின் கீழ் நிறுத்தி இருந்தேன். நான் மார்க்கெட்டுக்கு புறப்படும் முன் மழை பெய்ததது. ஆனால், பைக்கில் சிறிது தொலைவு சென்றதும் மழை நின்றுவிட்டது. ஆனால், எனது பேண்ட்டுக்குள் மட்டும் குளுகுளு என்று இருந்ததால், மழைநீர் பட்டிருக்கும் என நினைத்துவிட்டேன். ஆனால், பாம்பின் வால் எனது பாதம் அருகே வந்தபோதுதான் ஆபத்தை உணர்ந்து பைக்கி்ல் இருந்து ஆலறி அடித்து, கீழே குதித்தேன். எனது நண்பரின் கடைக்குள் வேகமாக ஓடிச் சென்று பேண்ட்டை கழற்றிவீசினேன். அப்போது பேண்ட்டுக்குள் இருந்து பாம்பு ஓடியது. எப்படி வந்தது எனத் தெரியவில்லை.

என் பேண்ட் முழுவதும் மழைநீர் பட்டு ஈரமாக இருந்ததால், பாம்பு என் கால், பகுதியில் ஏறியபோது எனக்கு உணர்வில்லை. வால் பகுதி மட்டும் தெரியவில்லை என்றால், என் உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும் எனத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்துக்கு பின் வீரேஷ் மிகவும் பயந்த நிலையில், பதற்றத்துடன் காணப்பட்டார். இதையடுத்து, வீரேஷை அவரின் நண்பர்கள், அருகில் உள்ள மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்கு அழைத்துச் சென்று வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x