Published : 10 Jun 2018 04:14 PM
Last Updated : 10 Jun 2018 04:14 PM

மஹாராஷ்டிராவில் டொர்னாடோ போன்ற சூறாவளி: கேமராவில் பதிவானது

புனேயில் உள்ள ரமல்லா கிராமத்தில் ஜூன் 8ம் தேதியன்று பயங்கரமான டொர்னாடோ சூறாவளி போன்ற ஒன்று கேமராவில் பதிவாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடிமக்களுக்கான அறிவியல் மையம், “முதல் முறையாக டொர்னாடோ சூறைக்காற்று போன்ற ஒன்று அதிகாரபூர்வமாக கேமராவில் பதிவாக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது.

இந்த அமைப்பின் மூவர் குழு மூத்த வானிலை ஆய்வாளர் டாக்டர் ஜே.ஆர்.குல்கர்னி தலைமையில் ரமல்லாவுக்குச் சென்று இது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளது.

இந்த டொர்னாடோ காட்சியை நேரில் கண்ட 10 பேரை விசாரிக்கவும் செய்து தகவல் திரட்டியுள்ளனர். அதாவது அது இருந்த நேரம், தீவிரம், பாதை ஆகியவை பற்றிய தகவல்களை இந்த மூவர் குழு திரட்டியுள்ளது. நேரில் பார்த்தவர்கள் எடுத்த புகைப்படம், வீடியோ ஆதாரங்களையும் ஆய்வுக்காக இந்தக் குழு பெற்றுள்ளது.

இந்த டொர்னாடோ 90 முதல் 120 விநாடிகள் நீடித்துள்ளது. சுற்றுப்பரப்பு 800 முதல் 1000 மீட்டர்கள் இருக்கலாம். ஆனால் சொத்துக்களுக்கு இதனால் எந்த வித சேதமும் ஏற்படவில்லை.

மேலெழுந்தவாரியாக சிறிய அடிப்பாகத்துடன் பெரியதான மேல்பாகத்துடன் சுழலும் இந்தக் காற்று நின்று போனவுடன் கன மழை பெய்துள்ளது. சுமார் ஒரு மணி நேரத்தில் 100மிமீ மழை பதிவாகியுள்ளது.

டொர்னாடோ அல்லது ட்விஸ்டர் என்று அழைக்கப்படும் இத்தகைய அபாயகரமான சூறைக்காற்று அமெரிக்காவில் சகஜமானது. ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா சில ஆப்பிரிக்க பகுதிகள், சில தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் இது ஏற்படும். வங்கதேசத்தில் பருவமழை சீசன் முடிந்த பிறகு சிறிய அளவில் டொர்னாடோ தோன்றுவது வழக்கம்.

1989-ம் ஆண்டு டொர்னாடோ வேகத்துக்கு டாக்கா அருகேயுள்ள தவ்லத்பூர் மற்றும் மானிக்குஞ்ச் பகுதிகளில் சுமார் 1,300 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x