Last Updated : 10 Jun, 2018 12:32 PM

 

Published : 10 Jun 2018 12:32 PM
Last Updated : 10 Jun 2018 12:32 PM

முதல் மதிப்பெண் எடுத்த மாணவருக்கு யோகி ஆதித்யநாத் அளித்த ரூ.1 லட்சம் பரிசுக் காசோலை பவுன்ஸ்: வங்கியில் மாணவர் அபராதம் செலுத்த நேரிட்ட அவலம்

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் இருந்து ரூ. ஒரு லட்சம் பரிசுக்கான காசோலையைப் பெற்ற முதல் மதிப்பெண் பெற்ற மாணவர், அந்த காசோலை வங்கியில் பவுன்ஸ் ஆனதால், அபராதம் செலுத்தியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் அலோக் மிஸ்ரா. சமீபத்தில் நடந்த 10-ம் வகுப்புத் தேர்வில் 94 சதவீத மதிப்பெண் பெற்று மாநிலத்தில் 7-வது இடம் பெற்றார். இதையடுத்து, அலோக் மிஸ்ராவை கடந்த மாதம் 29-ம் தேதி லக்னோவுக்கு அழைத்த முதல்வர் ஆதித்யநாத் அந்த மாணவரைப் பாராட்டி ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

மாணவர் அலோக் மிஸ்ராவுக்கு ஸ்டேட் வங்கியின் காசோலை வழங்கப்பட்டது. இதையடுத்து, அலோக் மிஸ்ராவின் தந்தை அந்த காசோலையை தன்னுடைய மகன் கணக்கு வைத்துள்ள தேனா வங்கியில் கடந்த 5-ம் தேதி டெபாசிட் செய்தார். ஆனால், வங்கியில் டெபாசிட் செய்து 3 நாட்களாகியும் பணம் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இதையடுத்து, அலோக் மிஸ்ராவின் தந்தை வங்கிக்குச் சென்று, பணம் வரவு வைக்கப்படாதது குறித்து விசாரித்துள்ளார்.

அப்போது வங்கி அதிகாரிகள் அந்தக் காசோலையில் இடப்பட்டுள்ள கையொப்பம் தவறாக இருப்பதால், அந்தக் காசோலைக்கு பணம் தர இயலாது எனத் தெரிவித்துவிட்டனர். தவறான காசோலையை கொடுத்ததற்காக அபராதம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து, அந்தக் காசோலையை திரும்பப் பெற்ற அலோக் மிஸ்ராவின் தந்தை, மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ராஜ் குமார் யாதவிடம் வழங்கினார்கள். அவர் உடனடியாக மாற்று காசோலை வழங்கி அனுப்பிவைத்தார்.

இது குறித்து அலோக் மிஸ்ராவின் தந்தை நிருபர்களிடம் கூறுகையில், 10-ம் வகுப்புத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற எனது மகனை அழைத்து முதல்வர் யோகி பாராட்டி, ஒரு லட்சத்துக்கான காசோலை வழங்கியதும்மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால், அந்த காசோலையை வங்கியில் செலுத்தினால் பணம் தரமுடியாது எனக்கூறி எனக்கு அபராதம் விதித்தனர். இது வேதனையாக இருந்தது. அதன்பின் மாவட்ட கல்வி அதிகாரியைத் தொடர்பு கொண்டு தெரிவித்தவுடன் மாற்றுக் காசோலை வழங்கினார். இருந்தாலும், காசோலைக்கான அபராதம் செலுத்தியது வருத்தமளிக்கிறது எனத் தெரிவித்தார்.

மாவட்டஆட்சியர் உதய் பானு திரிபாதி கூறுகையில், முதல்வர் அளித்த காசோலை திருப்பி அனுப்பப்பட்டுள்ளதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏதாவது தவறு நடந்திருக்கிறதா என ஆய்வு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x