Published : 10 Jun 2018 09:06 AM
Last Updated : 10 Jun 2018 09:06 AM

மும்பையில் கனமழையால் ரயில், விமான சேவை பாதிப்பு

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கனமழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ரயில், விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவ மழை கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்தமானில் தொடங்கியது. இதையடுத்து கேரளா, தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் மழை தொடங்கி உள்ளது. மும்பையில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

தொடர் மழையால் தாழ்வான பகுதிகள் மட்டுமல்லாது பல்வேறு முக்கிய சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சில குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் அப்பகுதியில் வசித்து வந்தவர்கள் வேறு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. கனமழை காரணமாக வேலைக்குச் செல்பவர்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை பிரிஹன் மும்பை மாநகராட்சி செய்து வருகிறது. மாநகராட்சியின் அனைத்து உயர் அதிகாரிகளின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஆங்காங்கே தேங்கும் நீரை உடனடியாக வெளியேற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களை திறந்து விடுமாறு மாநகராட்சிகேட்டுக் கொண்டுள்ளது.

மீட்புப் படை தயார்

தேவைப்பட்டால் மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபடுவதற்காக கடற்படை வீரர்களும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் பல்வேறு பகுதிகளில் தயார் நிலையில் உள்ளனர்.

இதனிடையே, கடந்த 2005-ல் பெய்ததைவிட மும்பையில் இந்த ஆண்டு அதிக அளவு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அவசியம் இன்றி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை காரணமாக நேற்று ரயில்கள் மற்றும் விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. சில விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x