Published : 10 Jun 2018 08:54 AM
Last Updated : 10 Jun 2018 08:54 AM

மகாராஷ்டிராவில் கூட்டணியில் தொடர வேண்டுமானால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும்: பாஜகவுக்கு சிவசேனா நிபந்தனை

மகாராஷ்டிராவில் கூட்டணி தொடர வேண்டுமானால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் என பாஜகவுக்கு சிவசேனா நிபந்தனை விதித்துள்ளது.

பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் உள்ளிட்ட சில கட்சிகள் விலகிவிட்டன. கூட்டணியில் இருக்கும் சிவசேனா கட்சியும் பாஜகவையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சிக்கிறது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்த பாஜக தலைவர் அமித் ஷா முயற்சித்து வருகிறார். இதற்காக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை அவர் சந்தித்து வருகிறார். மும்பையில் கடந்த புதன்கிழமை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை அமித் ஷா சந்தித்துப் பேசினார். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் சிவசேனா தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அப்போது, கூட்டணியில் நீடிக்க வேண்டுமானால் மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் பெரும்பாலான இடங்களில் அதாவது மொத்தமுள்ள 288 இடங்களில் 152 இடங்களை சிவசேனாவுக்கு ஒதுக்க வேண்டும் என்று அமித் ஷாவிடம் உத்தவ் தாக்கரே நிபந்தனை விதித்ததாக சிவசேனா கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், அதிக இடங்களில் போட்டியிடும் கட்சி என்ற முறையில் முதல்வர் பதவியையும் சிவசேனா விரும்புகிறது. ஆனால், பாஜக 130 தொகுதிகளை மட்டுமே சிவசேனாவுக்கு ஒதுக்க தயாராக உள்ளது. சிவசேனாவின் கோரிக்கை குறித்து கட்சியினருடன் ஆலோசித்துவிட்டு மீண்டும் சந்திப்பதாக உத்தவ் தாக்கரேயிடம் அமித் ஷா கூறியதாகத் தெரிகிறது.

சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மொத்தம் 158 தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் மகாராஷ்டிராவில் அதிக மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது.

1995-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் சிவசேனா கட்சி 171 தொகுதிகளிலும் பாஜக 117 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

‘‘அப்போது பாஜகவை விட சிவசேனா செல்வாக்கான கட்சியாக இருந்தது. இப்போதைய நிலைமை வேறு. அதன் அடிப்படையிலேயே போட்டியிட விரும்புகிறோம்’’ என்று பாஜக தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x