Last Updated : 10 Jun, 2018 08:51 AM

 

Published : 10 Jun 2018 08:51 AM
Last Updated : 10 Jun 2018 08:51 AM

கர்நாடக மாநிலத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு: பொதுபணித்துறை அமைச்சரானார் குமாரசாமி சகோதரர் ரேவண்ணா

கர்நாடகாவில் புதிததாக பொறுப்பேற்ற அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்கி அம்மாநில ஆளுநர் வஜுபாய் வாலா உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி உருவானது. முதல்வராக மஜதவின் மாநிலத் தலைவர் குமாரசாமியும், துணை முதல்வராக காங்கிரஸ் மாநிலத் தலைவர் பரமேஸ்வரும் கடந்த 23-ம் தேதி பதவியேற்றனர். இதையடுத்து இரு கட்சிகளிடையே நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு கடந்த 6-ம் தேதி காங்கிரஸை சேர்ந்த 15 பேரும், மஜதவை சேர்ந்த 10 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். துறைகளை பிரித்துக் கொள்வதில் பிரச்சினை ஏற்பட்டதால் இரு கட்சிகளின் மூத்த தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதற்கிடையில் பதவி கிடைக்காதவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அவர்களை மூத்த தலைவர்கள் சமாதானப்படுத்தினர்.

இதில் சுமூகமான முடிவு எட்டப்பட்டதை தொடர்ந்து, அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் பட்டியலை பரிந்துரைத்து ஆளுநர் வஜுபாய் வாலாவுக்கு முதல்வர் குமாரசாமி நேற்று முன்தினம் கடிதம் அனுப்பினார். இதை ஏற்றுக்கொண்ட ஆளுநர் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளை அனுமதித்து ஆணை பிறப்பித்தார்.

ஒக்கலிகர்கள்

அதில் குமாரசாமியின் சகோதரர் ரேவண்ணாவுக்கு பொதுப்பணித்துறை, உறவினர் தமண்ணாவுக்கு போக்குவரத்து துறை, ஜி.டி.தேவகவுடாவுக்கு உயர் கல்வித்துறை என மஜதவில் ஒக்கலிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. மஜதவின் கூட்டணிக் கட்சியான பகுஜன் சமாஜ் அமைச்சர் மகேஷுக்கு தொடக்க கல்வித்துறை ஒதுக்கப்பட்டது.

காங்கிரஸில் அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு நீர் வளத்துறை, ஆர்.வி.தேஷ்பாண்டேவுக்கு வருவாய்த்துறை, பிரியாங்க் கார்கேவுக்கு சமூக நலத்துறை, நடிகை ஜெயமாலாவுக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை ஒதுக்கப்பட்டிருந்தது. அமைச்சர்கள், நேற்று துறை சார்ந்த அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x