Last Updated : 02 Jun, 2018 08:19 PM

 

Published : 02 Jun 2018 08:19 PM
Last Updated : 02 Jun 2018 08:19 PM

நகரங்களைத் திணறவைத்த விவசாயிகள்: 2-வது நாள் போராட்டத்தால், காய்கறிகள், பழம், பால் விலை எகிறியது

பயிர் கடன் தள்ளுபடி, வேளாண் விளை பொருட்களுக்கு உரிய விலை, எம்எஸ் சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் 2-வது நாளாக இன்றும் போராட்டம் நடத்தினார்கள்.

சாலையில் பாலைக் கொட்டியும், காய்கறிகள், பழங்களைச் சாலையில் வீசி எறிந்தும் விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். நாசிக்கில் உள்ள மிகப்பெரிய மொத்த காய்கறிகள் மார்கெட், பால் பதப்படுத்தும் தொழிற்சாலை ஆகியவற்றுக்கு 2-வது நாளாக எதையும் அனுப்பாமல் விவசாயிகள் புறக்கணித்தனர். இதனால், பால், காய்கறிகள், பழங்கள் விலை கடுமையாக உயரத் தொடங்கியுள்ளது.

இதுபோல ஹரியாணா, பஞ்சாப், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

விவசாயிகள் தற்கொலை, பிரச்சினைகளைத் தீர்க்காமல் இருத்தல், பயிர் கடன் தள்ளுபடி, வேளாண் விளை பொருட்களுக்கு உரிய விலை, எம்எஸ் சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றக் கோரி அனைத்து இந்திய கிஷான் மகாசங்கம் நாடு முழுவதும்10 நாட்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதில் இந்திய கிஷான் மகாசங்கம் என்பது 110 விவசாய சங்கங்களின் மிகப்பெரிய கூட்டமைப்பாகும். இந்தப் போராட்டத்தில் தங்கள் மாநிலங்களில் இருந்து வேறு எந்த மாநிலத்துக்கும் தானியங்கள், காய்கறிகள், பழங்கள், பால் உள்ளிட்ட எந்த பொருட்களையும் அனுப்பாமல் மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதாகும்.

நாடு முழுவதும் விவசாய அமைப்புகளால் நேற்று தொடங்கிய போராட்டம் 2-வது நாளாக இன்றும் தொடர்ந்தது. மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே அருகே இருக்கும் நாசிக்கின் மிகப்பெரிய மொத்த காய்கறிச் சந்தைக்கு இன்று காய்கறிகள் வரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோல பால் பதப்படுத்தும் நிலையத்துக்கும் பால் வரவில்லை.

இது குறித்து அனைத்து இந்திய கிஷான் சபா அமைப்பின் செயல்தலைவர் ராஜு தேசாலே கூறுகையில், ’’நாசிக்கில் உள்ள அனைத்து பால் கொள்முதல் நிலையங்களும் அடைக்கப்பட்டன. விவசாயிகள், தங்களின் பால் மொத்தத்தையும், சாலையில் கொட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்’’ எனத் தெரிவித்தார்.

மேலும்,பஞ்சாப், ஹரியாணா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் விவசாயிகள் இன்று 2-வது நாளாக போராட்டத்தைத் தொடர்ந்தனர். சாலையில் காய்கறிகளையும், பழங்களையும், பாலையும் கொட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இன்றும் மக்களுக்கு தேவையான காய்கறிகள், பால் பொருட்கள் கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகினார்கள்.

இதனால், தலைநகர் டெல்லி, மும்பை, ஜெய்ப்பூர், உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்குக் காய்கறிகள், பால், போதுமான அளவில் செல்லாத காரணத்தால், விலை உயரத் தொடங்கியது. காய்கறிகள், பழங்கள் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 உயர்ந்தது.

சண்டிகரில் தக்காளி விலை கடந்த 2 நாட்களுக்கு முன் கிலோ ரூ.10 முதல் ரூ15க்கு விற்பனையான நிலையில், இன்று தக்காளி கிலோ ரூ.30 வரை விற்பனையானது. காய்கறிகள், குடைமிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் வரத்துச் சந்தைக்கு மிகக் குறைவாக இருந்தது. இதனால், அடுத்துவரும் நாட்களில் காய்கறிகளின் விலையும், பால், பழங்கள் விலையும் கடுமையாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப்பில் உள்ள நபா, லூதியானா, முக்த்சர், தரன் தரன், நான்கல், பெரோஸ்பூர் ஆகிய நகரங்களில் விவசாயிகள் காய்கறி, பால் லாரிகளையும், வாகனங்களையும் மடக்கி முடக்கினர்.

பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் கூறுகையில், ’’விவசாயிகளின் போராட்டம் என்பது மத்திய அரசுக்கு எதிராக மக்கள் அலையும், விவசாயிகளும் திருப்பி இருக்கிறார்கள் என்பதையும், விவசாயிகள் மிகவும் சிக்கலான நிலையில் இருப்பதையும் காட்டுகிறது.விவசாயிகளுக்கு எந்தவிதமான நிவாரணத்தையும் அளிக்காமல், அவர்களுக்கு எதிரான கொள்கைகளை கடைப்பிடிக்கிறது மத்திய அரசு’’ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x