Last Updated : 02 Jun, 2018 07:08 PM

 

Published : 02 Jun 2018 07:08 PM
Last Updated : 02 Jun 2018 07:08 PM

பாஜகவின் ‘ஆப்ரேஷன் கருடா’ உண்மையாக இருக்கலாம்: சந்திரபாபு நாயுடு கவலை

ஆந்திர மாநிலத்தில் குழப்பத்தையும், கட்சிகளிடையே பிளவையும் உண்டாக்கும் பாஜகவின் ‘ஆப்ரேஷன் கருடா’ திட்டம் உண்மையாக இருக்கலாம் என்று ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு கவலை தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டு தெலங்கானா மாநிலம் தனியாகப் பிரிந்து இன்றுடன் 4 ஆண்டுகள் ஆகிறது. இது தொடர்பாக விஜயவாடாவில் உள்ள பென்ஸ் சர்க்கிளில் நவ நிர்மான தீக் ஷா என்ற பெயரில் நிகழ்ச்சி நடந்தது.

இதில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

''கடந்த இரு மாதங்களுக்கு முன் நடிகர் சிவாஜி கூறிய 'ஆப்ரேஷன் கருடா' எனும் பாஜகவின் திட்டம் உண்மையாக இருக்கும் என்று எண்ணுகிறேன். மாநிலத்தில் கட்சிகளுக்கு இடையே ஒற்றுமையின்மையை ஏற்படுத்தி, துண்டாட பாஜக முயற்சிக்கிறது. ஒய்எஸ்ஆர் கங்கிரஸ், ஜனசேனா கட்சி ஆகியவை, பாஜகவுடன் கூட்டு சேர்ந்து, அரசியல் திட்டங்களை தீட்டி பாஜகவுக்கு உதவுகின்றன.

வெளிநாடுகளில் இருந்து கறுப்புப்பணத்தை மீட்டுக்கொண்டு வந்து மக்கள் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக மோடி வாக்கறுதி அளித்தார் அதைநிறைவேற்றவில்லை.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையையும், ஜிஎஸ்டி வரியையும் கொண்டு வந்து நாட்டின் பொருளாதாரத்தை மோடி சீரழித்து விட்டார். வங்கியில் நடைபெறும் மோசடிகளைப் பார்த்து, மக்கள் வங்கி மீது நம்பிக்கை இழந்து இருக்கிறார்கள். இது வேதனையளிக்கிறது.

மத்திய அரசின் புதிய வரிமுறைகள் அனைத்தும் சாமானிய மக்களை கடுமையாக பாதிக்கிறது. இட்லி சாப்பிடுவதற்கு கூட வரி செலுத்த வேண்டியது இருக்கிறது. இது மோடி அரசின் மிகப்பெரிய அட்டூழியம்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். ஆனால் ஒரு காசு குறைத்து மக்களை கிண்டல் செய்கிறது மத்திய அரசு.

ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபோது, சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். அந்த உறுதியை 4 ஆண்டுகளாக நிறைவேற்றவில்லை. மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து கேட்பது என்பது அடிப்படை உரிமை. ஆனால், மோடி அரசாங்கம் அதைச் செய்யவில்லை. இதற்குத் தேர்தலில் ஆந்திர மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள்.

ஒன்றுபட்டு இருந்த ஆந்திர மாநிலத்தை காங்கிரஸ் கட்சியுடன், பாஜக கைகோத்து செயல்பட்டு, தெலங்கானா மாநிலத்தைப் பிரித்தது. இந்தப் பிரிவினைக்கு தாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது என்று பாஜகவினர் கூறித் தப்பிக்க முடியாது. மாநிலப் பிரிவினை என்பது ஒரு சார்பாக, நியாயமில்லாமல் நடத்தப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் நியாயமில்லாத செயலுக்கு மக்கள் கடந்த மக்களவைத் தேர்தலில் சரியான பாடம் கற்பித்தனர். அதேபோல இந்தத் தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என நம்புகிறேன். இந்த மாநிலத்துக்கு நியாயம் கிடைக்கும் வரை, மக்கள் அரசோடு இணைந்து போராட வேண்டும்.

தலைநகர் அமராவதி நிர்மாணிக்க முழு உதவியும் செய்யப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துவிட்டு, போதுமான நிதி உதவி அளிக்கவில்லை. ஆனால், குஜராத் மாநிலத்தில் மிகப் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் தோலிரா நகருக்கு அனைத்து விதமான நிதி உதவிகளையும் மோடி செய்கிறார்.

மாநிலத்தில் ஒவ்வொரு இடத்திலும் பாஜக கலகம் செய்யத் தொடங்கிவிட்டது. முதலாவதாகத் திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலின் தலைமை அர்ச்சகர் ரமணா தீக்சிதலுவை தூண்டிவிட்டு, கோயில் நகைகள் திருடப்பட்டு ஜெனிவாவில் ஏலம் விடப்பட்டதாக புகார் அளிக்க வைத்து, சிபிஐ விசாரணை கோர வைத்தது. தலைமை அர்ச்சகர் மூலம் புகார் தெரிவித்து கோயில் பெருமையையும், என்னுடைய மரியாதையையும் சீரழிக்க பாஜக முயற்சிக்கிறது.''

இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

ஆப்ரேஷன் கருடா என்றால் என்ன?

தெலுங்கு நடிகர் சிவாஜி கடந்த மார்ச் மாதம் பாஜக மீது ஒரு பகீர் குற்றச்சாட்டைத் தெரிவித்தார். அதில், ஒவ்வொரு மாநிலத்திலும் தங்களின் எதிர்க்கட்சிகளை உடைக்கவும், அரசியல் எதிரிகளுக்கு இடையே வேறுபாடுகளை உண்டாக்கி அழிக்கவும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு திட்டத்தை பாஜகவை வைத்துள்ளது. இதற்காக ஆப்ரேஷன் திராவிடா என்ற பெயரில் ரூ.4,800 கோடி ஒதுக்கி இருக்கிறது. இதில் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்துக்கு ஆப்ரேஷன் கருடா எனும் திட்டம் வைத்துள்ளது. இந்தத் திட்டத்தில் அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் மக்கள் பலிகடவாக ஆக்கப்படுவார்கள்.

கேரளாவுக்கும்,தமிழகத்துக்கும் ஆப்ரேஷன் ராவணா திட்டத்தையும், கர்நாடக மாநிலத்துக்கு ஆப்ரேஷன் குமாரா எனும் திட்டத்தையும் பாஜக செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் குறித்த விரிவான விஷயங்களை விரைவில் வெளியிடுவேன் என்று பகீர் குற்றச்சாட்டை கூறி இருந்தார்.

இந்நிலையில் பாஜகவின் ‘ஆப்ரேஷன் கருடா’ திட்டம் உண்மையாக இருக்கலாம் என்று ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு கவலை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x