Published : 02 Jun 2018 05:51 PM
Last Updated : 02 Jun 2018 05:51 PM

காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே மலர்ந்த நெருக்கம்: ‘காதலில்’ முடிந்த ட்விட்டர் மோதல்

காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் ட்விட்டரில் நடத்திய வார்த்தைப்போர் தற்போது முடிவுக்கு வந்து இருகட்சிகளிடையே கூட்டணிக்கு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் டெல்லியில் பாஜகவை முறியடிக்கும் வகையில் இருகட்சிகளை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் தற்போது ரகசியமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் ஆட்சி நடத்தி வரும் ஆம் ஆத்மியும், அதன் ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும், பாஜக மற்றும் காங்கிரஸ் அரசியல் எதிரிகளாக இருந்து வருகின்றன. டெல்லி அரசுக்கு எதிராக தொடர்ந்து இருகட்சிகளும் ஊழல் புகார்களை கூறி வருகின்றன. இவ்விரு கட்சிகளையும் ஒரே நேரத்தில் சமாளிப்பது ஆம் ஆத்மி தலைவர்களுக்கு பெரிய வேலையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் சமீபத்தில் ஆம் ஆத்மி அரசை கடுமையாக விமர்சித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதற்கு பதிலடியாக ஆம் ஆத்மி தலைவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆம் ஆத்மி தலைவர்கள் திலிப் பாண்டே, சத்யேந்திர ஜெயின் அஜ்ய் மக்கானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் டெல்லியில் நடந்த ஊழல்களை பட்டியலிட்டார்.

இதற்கு பதிலடியாக அஜய் மக்கான் ஆம் ஆத்மி ஊழல் செய்ததாக பட்டியல் வாசித்தார். பின்னர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் மற்ற கட்சியினரை கடுமையாக விமர்சித்ததையும் பின்னர் மன்னிப்பு கேட்டதையும் சுட்டிக்காட்டி அஜய் மக்கான் கிண்டல் செய்தார். இதற்கு பதிலடியா, காங்கிரஸ் மூத்த தலைவர்களின் பல்டி பேச்சுகளை கூறி ஆம் ஆத்மி தலைவர்கள் விமர்சனம் செய்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பலர் ட்விட்டர் காங்கிரஸ் - ஆம் ஆத்மி மோதலால் பாஜக பலம் பெறுவதாக கருத்து தெரிவித்து இருந்தனர். மேலும் மோதலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அரவிந்த் கேஜ்ரிவால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை புகழ்ந்து ட்வீட் செய்தார். மிகச்சிறந்த கல்வியாளரான மன்மோகன் சிங் பிரதமராக தொடரும் வாய்ப்பை நாடு இழந்துள்ளது என அதில் கூறியிருந்தார்.

இதையடுத்து இருகட்சித் தலைவர்களிடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் - ஆம் ஆத்மி இணைந்து செயல்படுவது பற்றிய பேச்சு எழுந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக இருகட்சி தலைவர்களும் ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் கூட்டணி தொடர்பாகவும், தொகுதி பங்கீடு தொடர்பாகவும் பேச்சு வார்த்தை நடந்தது.

டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் இரண்டை காங்கிரஸூக்கு விட்டுத்தர ஆம் ஆத்மி முன் வந்தது. ஆனால் தொகுதி போதாது என்பதால் காங்கிரஸ் நிர்வாகிகள் பேச்சுவார்த்தையை பாதியிலேயே முடித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக புதுடெல்லி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அஜய் மக்கான் போட்டியிட விரும்பும் நிலையில் அந்த தொகுதியை விட்டுக் கொடுக்க ஆம் ஆத்மி தயாராக இல்லை. இந்த அளவில் பேச்சுவார்த்தை உள்ளதாகவும், காங்கிரஸ் தலைமையிடம் பேசி அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை தொடர இருப்பதாகவும் தெரிவிக்கிறது.

இருகட்சிகளும் டெல்லியில் இணைந்து போட்டியிட்டால் பாஜகவை வெற்றி பெறவிடாமல் தடுக்க முடியும் என்பதால் கூட்டணியை இருதரப்பும் விரும்புகிறது. எனினும் பேச்சுவார்த்தை நடந்ததை இருகட்சியினரும் தற்போது வரை ரகசியமாக வைத்துள்ளனர். உடன்பாடு ஏற்பட்ட பின்பு வெளிப்படையாக அறிவிக்க முடிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x