Published : 02 Jun 2018 10:32 AM
Last Updated : 02 Jun 2018 10:32 AM

பாஜகவை வீழ்த்த அடுத்த ரேஸ்: ம.பி.யில் மாயாவதி கட்சியுடன் கரம் கோர்க்கிறது காங்கிரஸ்

குமாரசாமியுடன் இணைந்து கர்நாடகாவில் பாஜகவை வீழ்த்தியதுபோல, மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கரம் கோர்த்து பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் தயாராகி வருகிறது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. சட்டப்பேரவையில் தனி்ப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக சார்பில் 104 எம்எல்ஏக்கள் மட்டுமே வெற்றி பெற்றனர்.

காங்கிரஸூக்கு 78 உறுப்பினர்கள், மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு 36 உறுப்பினர்கள், பகுஜன் சமாஜ் உறுப்பினர் ஒருவரும், 2 சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர். பெரும்பான்மைக்கு 113 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், பாஜக சார்பில் முதல்வராக பொறுப்பேற்ற எடியூரப்பா பெரும்பான்மையை நிருபிக்க முடியாமல் வெளியேறினார்.

அதன் பிறகு மஜத மாநிலத் தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் ஆதரவுடன் முதல்வராக பதவியேற்றார். பாஜக அரசு அமைப்பதை தவிர்க்கும் வகையில் சாதுர்யமாக தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைத்து வெற்றிகரமாக சாதித்தது காங்கிரஸ்.

காங்கிரஸின் கூட்டணி முயற்சி வெற்றி பெற்ற நிலையில் இதேபோன்று மற்ற மாநிலங்களிலும் கூட்டணி முயற்சியை மேற்கொள்ள காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது. இந்த ஆண்டு மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இங்கு பாஜக வலுவுடன் 15 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருகிறது. இந்த முறை பாஜகவிடம் இருந்து ஆட்சியை தட்டிப்பறிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் திடமுடன் உள்ளது.

அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் பாஜக அரசுக்கு எதிரான எதிர்ப்பு அலை நிலவுகிறது. விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற பல்வேறு பிரச்சினைகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். அதுபோலவே வர்த்தகர்கள் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்திய பிரதேசத்தில் பாஜகவுக்கும், காங்கிரஸூக்கும் மட்டுமே நேரடி போட்டி நிலவி வருகிறது. எனினும் இங்கு சில பகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்கு வங்கி உள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி 7 சதவீதம் வாக்குகளை வாங்கியுள்ளது. காங்கிரஸூக்கு 35 சதவீத வாக்குகள் உள்ளன. அதேசமயம் ஆளும் பாஜகவுக்கு 40 சதவீத அளவில் வாக்குகள் உள்ளன.

எனவே வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் கரம் கோர்ப்பதன் மூலம் எதிர்ப்பு வாக்குகள் சிதறாமல் இருக்க முடியும் என காங்கிரஸ் நம்பகிறது. இரு கட்சிகளின் வாக்குகளும் சேர்ந்தால், எதிர்ப்பு அலையில் பாஜகவை எளிதில் வீழ்த்த முடியும் என காங்கிரஸ் திட்டமிடுகிறது.

இதுதொடர்பாக மாயாவதியின், காங்கிரஸின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பாஜகவுக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி, காங்கிரஸூடன் சேர்ந்து பகுஜன் சமாஜ் ஒரணியில் திரண்டுள்ளது. எனவே மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸூடன் இணைந்து செயல்பட பகுஜன் சமாஜ் கட்சி தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

எனினும் தொகுதி பங்கீட்டில் சிக்கல் எழ வாய்ப்புள்ளது. மாயாவதி கேட்கும் இடங்களை வழங்க மத்திய பிரதேச மாநில உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அவர்களை சமரசப்படுத்தி கூட்டணி அமைக்கும் முயற்சியை காங்கிரஸ் தலைமை முன்னெடுத்து வருகிறது. திக் விஜய் சிங் உட்பட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சிலருக்கு இதற்கான பணி வழங்கப்பட்டுள்ளது. ம.பி.யில் கரம் கோர்க்க சம்மதித்தால் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் சட்டீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து செயல்பட காங்கிரஸ் முன் வரும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x