Published : 02 Jun 2018 08:38 AM
Last Updated : 02 Jun 2018 08:38 AM

பிஹாரில் புத்த கயா குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் 5 பேருக்கும் ஆயுள்: தேசிய புலனாய்வு அமைப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

புத்த கயாவில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 5 பேருக்கும் ஆயுள் தண்டனையை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நீதிமன்றம் விதித்துள்ளது.

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் பிஹாரின் புத்த கயா உள்ளது. இது 2,500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது. புத்தர் ஞானம் பெற்ற இடம் என்பதால் இதை புத்த மதத்தவர்கள் தங்களின் போற்றுதலுக்குரிய புனிதத் தலமாக மதித்து வழிபட்டு வருகின்றனர்.

புத்த கயாவில் 2013-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி 10 வெடிகுண்டுகள் வெடித்தன. மேலும் அங்கிருந்த 3 வெடிகுண்டுகளை வெடிகுண்டு வல்லுநர்கள் செயலிழக்கச் செய்தனர். கோயில் பகுதியில் பதற்றத்தை உண்டாக்கவும், அங்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்களைக் கொல்லவும் சதி செய்து அந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இதில் 2 புத்த பிட்சுக்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த என்ஏஐ அதிகாரிகள் 6 பேரைக் கைது செய்து அவர்கள் மீது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். இவர்கள் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள். இதுதொடர்பான வழக்கு பாட்னாவிலுள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதில் தவுபீக் அகமது என்பவர் 17 வயதுக்குள்பட்டவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

எஞ்சிய உமர் சித்திக்கி, அசாருதீன் சித்திக்கி, ஹவுசர் அலி, முஜிபுல்லா அன்சாரி, இம்தியாஸ் அன்சாரி ஆகிய 5 பேரும் குற்றவாளிகள் என் நீதிபதி மனோஜ் குமார் சின்ஹா அறிவித்திருந்தார்.

நேற்று அவர்கள் 5 பேருக்கும் தண்டனை அறிவிக்கப்பட்டது.. அவர்கள் 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் அவர்களுக்குத் தலா ரூ.50 ஆயிரம் அபராதத்தையும் நீதிபதி விதித்தார்.

குண்டுவெடிப்பில் உயிர்ப்பலி எதுவும் நிகழவில்லை என்பதால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படவில்லை என என்ஏஐ வழக்கறிஞர் லாலன் குமார் சின்ஹா நிருபர்களிடம் தெரிவித்தார். - ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x