Last Updated : 02 Jun, 2018 08:37 AM

 

Published : 02 Jun 2018 08:37 AM
Last Updated : 02 Jun 2018 08:37 AM

நடிகர் சல்மான்கான் தயாரிக்கும் ‘லவ்ராத்ரி’ புதிய படத்துக்கு எதிர்ப்பு: ஆக்ராவின் விஹெச்பி தலைவரின் சர்ச்சைக்குரிய அறிவிப்பு

பாலிவுட் நடிகர் சல்மான்கான் தயாரித்து வரும் ‘லவ்ராத்ரி’ எனும் புதிய படத்துக்கு உபியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்காக சல்மானை தாக்குவோருக்கு ரூ.5 லட்சம் பரிசு என ஆக்ரா பகுதி விஹெச்பி தலைவர் அறிவித்துள்ளார்.

நடிகர் சல்மான்கான் ‘லவ்ராத்ரி’ எனும் பெயரில் திரைப்படம் தயாரித்து வருகிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் கதைக்கு சில இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நேற்று முன்தினம், ஆக்ராவின் பகவான் டாக்கீஸ் நாற்சந்தியில் லவ்ராத்ரி படபோஸ்டரை விஹெச்பியினர் எரித்தனர். அப்போது, சல்மானை பொது இடங்களில் தாக்குவோருக்கு ரூ.5 லட்சம் பரிசாக அளிக்கப்படும் என ஆக்ரா பகுதியின் விஹெச்பி தலைவர் கோவிந்த் பராஷர் அறிவித்துள்ளார். விஹெச்பியின் முன்னாள் தலைவரான பிரவீண்பாய் தொகாடியாவிற்கு பராஷர் நெருக்கமானவராகக் கருதப்படுகிறார்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் கோவிந்த் பராஷர் கூறும்போது, ‘தனது படத்திற்கு லவ்ராத்ரி எனப் பெயரிட்டு இந்துக்களின் பண்டிகையான நவராத்ரியை களங்கப்படுத்த சல்மான் முயல்கிறார். இதனால்தான் அவரைத் தாக்குவோருக்கு ரூ.5 லட்சமும், அப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் பகுதிகளில் சேதப்படுத்துவோருக்கு ரூ.2 லட்சமும் பரிசாக அறிவித்துள்ளேன்’ என்று கூறினார்.

இப்படத்தில், குஜராத் மாநிலத்தில் நவராத்திரி சமயங்களில் நடைபெறும் ‘தாண்டியா’ நடனம் இடம் பெற்றுள்ளது. இதுபோன்ற நடனங்களில் குஜராத் மாநிலத்தின் சில குடும்பங்கள் தமது பிள்ளைகளை கண்காணிக்க தனியார் புலனாய்வு அமைப்புகளை நாடுவது உண்டு. இதைப் போன்ற சில உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து லவ்ராத்ரி உருவாக்கப்படுகிறது. சல்மான்கான் சகோதரியின் கணவர் ஆயுஷ் சர்மாவும், ஜோடியாக வாரீனா உசைனும் புதுமுகங்களாக படத்தில் அறிமுகமாகின்றனர். அக்டோபர் 5-ம் தேதி நவராத்திரி சமயத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x