Last Updated : 02 Jun, 2018 08:35 AM

 

Published : 02 Jun 2018 08:35 AM
Last Updated : 02 Jun 2018 08:35 AM

மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு: கர்நாடக அமைச்சர்கள் 6-ம் தேதி பதவியேற்பு

கர்நாடக மாநில அமைச்சரவை பகிர்வு தொடர்பாக மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) - காங்கிரஸ் இடையே தொடர்ந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. அமைச்சர்கள் வருகிற 6-ம் தேதி பதவியேற்பார்கள் என மாநில முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி இணைந்து ஆட்சி அமைத்துள்ளன. முதல்வராக மஜத மாநில தலைவர் குமாரசாமியும், துணை முதல்வராக காங்கிரஸைச் சேர்ந்த பரமேஷ்வரும் கடந்த 23-ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர்.

ஆனால், அமைச்சரவை பகிர்வில் இரு கட்சியினரிடையே ஒருமித்த கருத்து எட்டப்படாததால், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவில்லை. குறிப்பாக நிதித்துறையை தரவேண்டும் என்று காங்கிரஸ், மஜத ஆகிய இரு கட்சிகளும் வலியுறுத்தின.

இதுகுறித்து மஜத பொதுச்செயலாளர் டேனிஷ் அலி தலைமையில் அக்கட்சி தலைவர்கள், காங்கிரஸ் தலைவர்களுடன் 5 கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் துறைகளை பிரிப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் முதல்வர் குமாரசாமி டெல்லிக்கு சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல், சோனியாவுடன் ஆலோசனை நடத்தினார். இதில், 34 பேர் கொண்ட அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 22, மஜதவுக்கு 12 என பிரித்துக் கொள்ளப்பட்டது.

ஆனால் நிதித்துறை, உள்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை காங்கிரஸ் கோரியதால் அமைச்சரவை விரிவாக்கம் செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்தது. இறுதியில் மஜதவுக்கு நிதித்துறை, காங்கிரஸுக்கு உள்துறை என பிரித்துக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் பரமேஷ்வர் ஆகிய இருவரும் நேற்று பெங்களூருவில் ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து அமைச்சரவை பட்டியலை அளித்தனர். புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கான நேரத்தை விரைவில் வழங்குமாறும் கோரின‌ர். அதற்கு ஆளுநர், தான் டெல்லிக்கு செல்ல இருப்பதால் சரியான தேதியை தெரிவிக்க இயலாத நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து முதல்வர் குமாரசாமி, காங்கிரஸ் மேலிட தலைவர் வேணுகோபால் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். வேணுகோபால் கூறுகையில், ''காங்கிரஸ், மஜத கூட்டணி அரசில் அமைச்சரவை பகிர்வு சுமூகமாக முடிந்துள்ளது. ஆட்சி சுமூகமாக நடக்கும் வகையில் இருகட்சிகளும் சிலவற்றை விட்டுக்கொடுத்துள்ளன. எனவே குமாரசாமி தலைமையிலான ஆட்சி 5 ஆண்டுகளுக்கு தொடரும். அதில் எந்த மாற்றமும் இல்லை''என்றார்.

இதையடுத்து குமாரசாமி பேசுகையில், ''அமைச்சரவையில் காங்கிரஸுக்கு உள்துறை, தொழில், சுகாதாரம், விவசாயம், வருவாய் உட்பட 22 அமைச்சக துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நிதித்துறை,பொதுப்பணி, கல்வி, சுற்றுலா, போக்குவரத்து துறை உள்ளிட்ட 12 துறைகள் மஜதவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஆளுநர் டெல்லிக்கு சென்று 4-ம் தேதிதான் பெங்களூரு திரும்புகிறார். அதன்பிறகு அவரை சந்தித்து நேரம் கேட்டு மீண்டும் வலியுறுத்த உள்ளோம். எனவே 6-ம் தேதி அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடக்க வாய்ப்பு உள்ளது''என்றார்.

2019 தேர்தலிலும் கூட்டணி

இதனிடையே, மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், ‘‘காங்கிரஸ் மஜத கூட்டணி அரசு அடுத்த 5 ஆண்டுகளுக்கு எவ்வித சிக்கலும் இன்றி சிறப்பாக நடைபெறும். கர்நாடக மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படும். எங்களது கூட்டணி 2019 மக்களவை தேர்தலிலும் தொடரும். இதனை மஜத தேசிய தலைவர் தேவகவுடாவும் உறுதிபடுத்தியுள்ளார்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x