Published : 02 Jun 2018 08:22 AM
Last Updated : 02 Jun 2018 08:22 AM

ம.பி., கேரளா உள்ளிட்ட 7 மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் தொடக்கம்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விளைப்பொருட்களுக்கு உரிய விலை வழங்குதல், கடன் தள்ளுபடி செய்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மத்தியபிரதேசம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 7 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களின் 10 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை நேற்று தொடங்கினர்.

விவசாயிகளின் இப்போராட்டத்தால் காய்கறிகள், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

மத்தியபிரதேசத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த விவசாயிகளின் போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 6 விவசாயிகள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தின் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி, மத்தியபிரதேசத்தில் விவசாயிகள் 10 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அண்மையில் அறிவித்திருந்தனர்.

இதற்கு ஆதரவாக, ஹரியாணா, ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான், மகராஷ்டிரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்திருந்தனர். அதன்படி, மேற்குறிப்பிட்ட 7 மாநிலங்களில் விவசாயிகளின் போராட்டம் நேற்று தொடங்கியது. 150-க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. விளைப்பொருட்களுக்கு உரிய விலை வழங்க வேண்டும்; விவசாயக் கடன்களை ஒட்டுமொத்தமாக தள்ளுபடி செய்ய வேண்டும்; சுவாமிநாதன் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், விவசாயிகளின் வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக மத்தியபிரதேசம், ஹரியாணா, மகாராஷ்டிரா, ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட் டது.

வேலைநிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, மேற்குறிப்பிட்ட மாநிலங்களின் பல பகுதிகளில் விவசாயிகள், தங்களின் விளைப்பொருட்களான காய்கறிகள், பால் ஆகியவற்றை சாலைகளில் கொட்டினர். இவ்வாறு பல டன் காய்கறிகள், வீணாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், வரும் நாட்களில் காய்கறிகளுக்கு பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்படும் எனக் கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x