Last Updated : 02 Jun, 2018 07:22 AM

 

Published : 02 Jun 2018 07:22 AM
Last Updated : 02 Jun 2018 07:22 AM

4 மாநிலங்களுக்கான நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை ஆணைய அறிவிப்பு அரசிதழில் வெளியீடு: மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் நடவடிக்கை

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான அறிவிப்பை அரசிதழில் வெளியிட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, காவிரி மேலாண்மை ஆணையம் நதிநீர் பங்கீடு தொடர்பான பணிகளை விரைவில் தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கை விசாரித்த நடுவர் மன்றம் கடந்த 2007-ல் இறுதி உத்தரவு பிறப்பித்தது. இதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் தமிழகத்துக்கு 192 டிஎம்சி நீர் வழங்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த இவ்வழக்கில், கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், தமிழகத்துக்கு வழங்கப்பட்ட காவிரி நீரின் அளவை 192 டிஎம்சியில் இருந்து 177.25 டிஎம்சி ஆக குறைக்கப்பட்டது. மேலும், கர்நாடகாவுக்கு 284.75 டிஎம்சி நீரும் கேரளாவுக்கு 30 டிஎம்சி நீரும் புதுச்சேரிக்கு 7 டிஎம்சி நீரும் வழங்க வேண்டும் என்றும் இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசு 6 வாரங்களுக்குள் செயல் திட்டத்தை (ஸ்கீம்) உருவாக்க வேண் டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

கர்நாடக தேர்தலைக் காரணம்காட்டி இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த மே 14-ம் தேதி மத்திய அரசு 14 பக்க செயல்திட்ட வரைவு அறிக்கையை தாக்கல் செய்தது. இதில் தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய அரசுகள் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டன.

இதையடுத்து, தமிழக அரசின் கோரிக்கையின்படி, காவிரி மேலாண்மை ஆணையம் என பெயர் மாற்றப்பட்டது. மேலும் இதன் தலைமை அலுவலகம் பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது. நீர் பங்கீடு, ஆய்வுகள் மேற்கொள்வது, அணைகளை திறப்பது, இறுதி முடிவு எடுப்பது உள்ளிட்ட அனைத்து அதிகாரமும் ஆணையத்துக்கே இருக்க வேண்டும் என்பதையும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த மே 18-ம் தேதி, திருத்தப்பட்ட வரைவு அறிக்கையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் முன்னிலையில் மத்திய அரசு தாக்கல் செய்தது. அதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், “காவிரி தீர்ப்பை செயல்படுத்தும் வரைவு அறிக்கையின்படி காவிரி மேலாண்மை ஆணையத்தை வருகிற பருவ காலத்துக்குள் (ஜூன்) மத்திய அரசு அமைக்க வேண்டும். வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களின்படி புதிய அமைப்பு செயல் பட வேண்டும். இந்த தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு அம லில் இருக்கும். இது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக‌ அரசிதழில் வெளியிட வேண் டும்” என உத்தரவிட்டது.

நீர்வளத் துறை நடவடிக்கை

இதனைத் தொடர்ந்து, மத்திய நீர்வளத்துறை மற்றும் ஆற்று மேம்பாட்டுத் துறை அமைச்சகம், “மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டு சட்டம் 6 (ஏ) 1956-ன்படி, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது” என அறிவித்தது. அதன் பின்னர், மத்திய நீர்வளத்துறை மூத்த இணை ஆணையர் ஆர்.கே. கனோடியா, மத்திய அரசிதழ் அச்சக இயக்குநருக்கு நேற்று ஆணை ஒன்றை பிறப்பித்தார்.

அதில், “கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீட்டை மேற்கொள்ளும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கான அறிவிப்பை உடனடியாக மத்திய அரசிதழ் மற்றும் இணையதளத்தில் வெளி யிட வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடர்பான அறிவிப்பை கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில அரசுக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது.

தற்காலிக தலைவர் நியமனம்

மத்திய அரசிதழில் காவிரி மேலாண்மை ஆணையம் வெளியிடப்பட்டதால், உச்ச நீதிமன்ற உத்தரவு உடனடியாக செயல் வடிவம் பெற்றுள்ளது. அதன்படி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, காவிரி மேலாண்மை ஆணையத் தின் தற்காலிக தலைவராக மத்திய‌ நீர்வளத் துறைச் செயலாளர் யூ.பி.சிங்கை நியமித்துள்ளார். 4 மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்த பின்னர், இந்த ஆணையத்ததுக்கு நிரந்தர தலைவர், நியமன உறுப்பினர்கள் உள்ளிட்டோரை நியமிக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மத்திய நீர்வளத்துறை அறிவித்துள்ளது.

ஆணையத்துக்கான அதிகாரங்கள் விவரம்

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கே அனைத்து அதிகாரங்களும் உண்டு. மத்திய அரசு இதில் தலையிட முடியாது. நீர் திறப்பில் பிரச்சினை ஏற்பட்டால் மாநிலங்கள் ஆணையத்தை அணுக வேண்டும். மாநிலங்கள் ஆணையத்தின் உத்தரவை மதிக்காத நிலையில், மத்திய அரசை அணுக வேண்டும்.

காவிரியின் குறுக்கே உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகள் கர்நாடகாவின் கட்டுப்பாட்டிலும் மேட்டூர், லோயர் பவானி, அமராவதி அணை கள் தமிழகத்தின் கட்டுப்பாட்டிலும் பனசுரசாகர் கேரளாவின் கட்டுப்பாட்டிலும் இருக்கும். அணைகளில் இருந்து நீர் திறப்பு, நீர் இருப்பு மேலாண்மை, ஆய்வு போன்றவற்றை ஆணையம் மேற்கொள்ளும்.

ஆணையத்தின் அனுமதியின்றி காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் புதிய அணைகள், தடுப்பணைகளை கட்டக் கூடாது.

இந்த ஆணையத்தின் தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி அல்லது அனுபவம் வாய்ந்த‌ தலைமைப் பொறியாளர் நியமிக்கப்படுவார். ஆணையத்தில் 9 உறுப்பினர்கள், 2 முழு நேர உறுப்பினர்கள், 2 பகுதி நேர உறுப்பினர்கள், 4 மாநிலங்களில் இருந்து தலா ஒருவரும் மத்திய அரசு சார்பில் ஒருவரும் பகுதி நேர உறுப்பினர்கள் இடம்பெறுவார்.

ஆணையத்தின் செயல்பாட்டுக்காக, ஆரம்பகட்ட நிதியாக மத்திய அரசு ரூ.2 கோடி வழங்கும். பிறகு அனைத்து செலவுகளையும் கர்நாடகாவும் தமிழகமும் தலா 40%, கேரளா 15%, புதுச்சேரி 5% ஏற்க வேண்டும்.

நீர் இருப்பைக் கண்காணிப்பது, திறந்துவிடுவது, சேமிப்பது ஆகியவற்றை ஆணையம் கவனிக்கும். இதற்காக பிலிகுண்டுலுவில் புதியதாக அளவை நிலையம் அமைக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x