Published : 01 Jun 2018 08:23 PM
Last Updated : 01 Jun 2018 08:23 PM

‘லிவிங் டு கெதர்’; 19 வயது பெண்ணுடன், 18 வயது ஆண் சேர்ந்து வாழலாம்: கேரள உயர் நீதிமன்றம் அனுமதி

18 வயதான ஆணும், 19 வயதான பெண்ணும் திருமண வயதை அடையும் வரை சேர்ந்து வாழலாம் அதில் எந்தவிதமான தடையும் இல்லை. ‘லிவிங் டுகெதர்’ முறை நம் சமூகத்தில் இருக்கிறது என்று கேரள உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பில் 18 வயது ஆனவர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களுடன் திருமண வயது அடையாவிட்டாலும் கூட சேர்ந்து வாழலாம் எனத் தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆழப்புழா நகரைச் சேர்ந்தவர் முகம்மது ரியாத். இவர் தன்னுடைய 19 வயது மகளை, 18 வயது இளைஞர் கடத்திச் சென்றுவிட்டார், அவரைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று ஆட்கொணர்வு மனுவைக் கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

போலீஸார், ரியாத்தின் மகளையும், அந்த இளைஞரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். ஆனால், அவர்கள் இருவரும் தாங்கள் திருமணம் செய்து சேர்ந்து வாழ்வதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்கள் இருவரையும் காப்பகத்தில் சேர்க்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், முகம்மது ரியாத் தாக்கல் செய்த மற்றொரு மனுவில் தனது மகளும், அந்த இளைஞரும் சட்டப்படியான திருமண வயதை எட்டவில்லை என்பதால், அவர்கள் செய்த திருமணம் செல்லாது. அது குழந்தை திருமணத் தடைச்சட்டத்தின் கீழ் வரும். அந்தத் திருமணம், செல்லாது என அறிவிக்க வேண்டும். ஆணுக்கு 23 வயதும், பெண்ணுக்கு 21 வயதும் அடைந்தபின்தான் திருமணம் செய்ய முடியும் எனச் சட்டத்தில் இருக்கிறது. ஆதலால், அவர்கள் செய்த திருமணத்தை ரத்து செய்து, தனது மகளை தன்னுடன் அனுப்பிவைக்க வேண்டும் என்று  கோரி இருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் வி.சிதம்பரேஷ், கே.பி.ஜோதிர்நாத் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ''சமூகத்தில் திருமணம் செய்யாமல் ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழவில்லை, லிவிங் டுகெதர் என்ற முறை நம் சமூகத்தில் இல்லை என்று கண்ணைக் கட்டிக்கொண்டு மறுக்க முடியாது. பெண்ணுக்குத் திருமண வயது 21, ஆணுக்கு திருமணவயது 23 என்று சட்டத்தில் உள்ளது என்பது திருமணத்தைப் பதிவு செய்வதற்காகத்தான். ஆனால், 18 வயது ஆன ஆணும், பெண்ணும் யாருடன் தாங்கள் சேர்ந்து வாழவேண்டும் என முடிவு செய்வது அவர்களின் உரிமை. இதில் நீங்களும், நீதிமன்றமும் தலையிட முடியாது.

வயது வந்த இருவரின் உறவுகளையும், உரிமைகளையும் நீதிமன்றம் மதிக்கிறது. அந்தப் பெண், அந்த இளைஞருடன் சேர்ந்து சுதந்திரமாக வாழத் தடையில்லை. திருமண வயதை அடைந்தபின் அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். சட்டப்பூர்வமாக அவர்கள் இருவரும் திருமணம் செய்யாவிட்டாலும், நடைமுறையில், எதார்த்த வாழ்வில் கணவன், மனைவியாக வாழ்கிறார்கள். 18 வயது நிரம்பிய பெண் தனக்குப் பிடித்தமான ஆணுடன் சேர்ந்து வாழ உரிமை இருக்கிறது. அவர் எங்கு வேண்டுமானாலும் சென்று சேர்ந்து வாழலாம். சட்டப்படியாக அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளும்வரை சேர்ந்து வாழத் தடையில்லை. அவர்களைப் பிரிக்க உத்தரவிட முடியாது'' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x