Last Updated : 01 Jun, 2018 07:15 PM

 

Published : 01 Jun 2018 07:15 PM
Last Updated : 01 Jun 2018 07:15 PM

‘சீதை’ டெஸ்ட் டியூப் பேபி: ‘நாரதர்- கூகுள்’: வைரலாகும் உ.பி. துணை முதல்வரின் சர்ச்சை பேச்சு

ராமாயணத்தில் வரும் சீதா தேவி, பூமியில் இருந்து பிறந்தவர் என்ற கூறப்பட்டாலும், இன்றைய தொழில்நுட்பத்தில் அவர் டெஸ்ட் டியூப் குழந்தை போன்றவர் என்று உத்தரப்பிரதேசத்தின் துணை முதல்வர் தினேஷ் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். .

மதுரா நகரில் இந்தி இதழியல் குறித்து நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் துணை முதல்வர் தினேஷ் சர்மா பேசினார். அவர் பேசிய வீடியோ அதன்பின் சமூக வலைத்தளங்களில் வைரலானது. தினேஷ் சர்மா பேசியதாவது:

இதழியல்துறை(பத்திரிக்கைதுறை) என்பது நவீன காலத்தில் தொடங்கியது அல்ல. மஹாபாராதம் நடந்த காலத்திலேயே இதழியல் இருந்திருக்கிறது. பாரதப்போர் நடந்தபோதிலும், அதற்கு முன்பும், ஹஸ்தினாபுரத்தில் இருந்து கொண்டே திருதிராஷ்ட்ர மகாராஜாவுக்கு அனைத்துச் சம்பவங்களையும் நேரடியாகப் பார்த்ததுபோன்று அவரின் அமைச்சர் சஞ்ஜயன் கூறுவார். இவை அனைத்தையும் நேரலையாக அவர் எடுத்துரைப்பார். இது நேரலை இல்லாமல் எதுவென்று கூறுவது?.

அதுமட்டுமல்லாமல், இன்று அனைத்து விஷயங்களுக்கும் கூகுள் தளத்தைத்தான் நாம் தேடுகிறோம். ஆனால், புராணகாலத்திலேயே நடமாடும் கூகுள் இருந்தது. அது வேறுயாருமல்ல நாரத முனிவர்தான் நடமாடும் கூகுள் ஆவார். இவர் எந்த இடத்துக்கும் எளிதாகச் சென்று ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு தகவலை வேகமாக பரப்பிவந்தார். ஏராளமான தகவல்களையும் கையில் வைத்திருந்தார். எப்போதும் நாராயணா என்று மூன்று முறை உச்சரித்துக்கொண்டே இருப்பார். இவர்தான் முன்பு இருந்த கூகுள்.

ராமாயணத்தை எடுத்துக்கொண்டால், ராமனின் மனைவி சீதா தேவி பூமியில் இருந்து தோன்றியவர் என்கின்றனர். ஜனகர் நிலத்தில் கலப்பையில் உழும்போது சீதா தேவி குழந்தையாகக் கிடைத்தார். என்னைப்பொறுத்தவரை இப்போது இருக்கும் டெஸ்ட் டியூப் பேபி போன்றுதான் அந்த காலத்தில் சீதா தேவி பூமியில் இருந்து பிறந்தார்.

இலங்கையில் இருந்து சீதாதேவியை மீட்டு ராமர் புஷ்பக விமானத்தில் வந்தார். இன்றுள்ள விமானம் போன்றதுதான் அந்தப் புஷ்பக விமானமாகும். ராமர் வாழ்ந்த காலத்திலேயே விமானம் இருந்தற்கான சான்றாகும்

இவ்வாறு தினேஷ் சர்மா பேசினார்.

மாநிலத்தின் துணை முதல்வரின் இத்தகைய மவுட்டிகமான பேச்சு சமூக வலைத்தளங்களில் பரவ  பெரும் சர்ச்சையானது, பலராலும் விமர்சிக்கப்பட்டது.

ஆனால், துணை முதல்வர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது என்று பாஜக செய்தித்தொடர்பாளர் திரிபாதி கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், துணை முதல்வர் சர்ச்சைக்குரிய பேச்சு எதையும் பேசவில்லையே. நான் அவரின் பேச்சை ஆதரிக்கிறேன். அவர் இந்திய கலாச்சாரத்தை பெருமையாகவே பேசியுள்ளார். இப்போது இருக்கும் ஒரு சில ஊடகங்கள்தான் கலாச்சாரத்தை சீரழிக்கின்றன எனத் தெரிவித்தார்.

பாஜக தலைவர்கள், முதல்வர் இதுபோல் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையிலும், புராணத்தையும், அறிவியலையும் தொடர்பு படுத்தி பேசி, நகைப்புக்கும், கிண்டலுக்கும் ஆளாகி வருகின்றனர்.

அறுவை சிகிச்சையும், பிளாஸ்டிக் சர்ஜரியும் புராணகாலத்திலேயே இருந்தது, இன்றைய விமானம்தான் அன்றைய புஷ்பக விமானம், புவியீர்ப்பு ஆய்வு, அணு குண்டு ஆய்வு, இன்டர்நெட் ஆகிய புராணகாலத்திலேயே இருந்தது என்று இதற்கு முன் பேசி சர்ச்சையில் சிக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x