Published : 01 Jun 2018 03:54 PM
Last Updated : 01 Jun 2018 03:54 PM

‘ராமன் கடத்திய சீதை’: குஜராத் 12-ம்வகுப்பு சமஸ்கிருத பாடத்தில் வினோதம்

குஜராத் மாநிலத்தில் 12-ம் வகுப்பு சமஸ்கிருத பாடத்தில் சீதையைக் கடத்தியது ராவணன் என்பதற்கு பதிலாக, ராமர் என்று குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதிகாசமான  ராமாயணத்தில் காட்டில் இருந்த சீதையை ராவணன் மாயஉருவத்தில் வந்து கடத்திச் சென்றார் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், குஜராத் மாநிலத்தில் அரசு பள்ளிப்பாட வாரியம் சார்பில் 12-ம் வகுப்புக்கு வழங்கிய சமஸ்கிருத பாடத்தில் இது தலைகீழாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

12-ம்வகுப்பான சமஸ்கிருத பாடத்தில் காளிதாஸ் ரகுவம்ஸம் என்ற பகுதியில் 106-வதுபக்கத்தில், வனத்தில் தனியாக இருந்த சீதையை ராமர் கடத்திவிட்டார் என்று லட்சுமணன் ராமனிடம் கூறினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழியெர்க்கப்பட்ட இந்தப் பாடத்தில் ஏராளமான தவறுகள் இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். அதிலும் கடத்தப்பட்டார் என்று ஆங்கில வார்த்தைக்குப் பதிலாக, அழித்துவிட்டார் என்று தவறுதலாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இது குறித்து குஜராத் பள்ளிக் கல்வி வாரியத்தின் தலைவர் நிதின் பெத்தானி கூறுகையில், 12-ம்வகுப்பு பாடப்புத்தகத்தில் ராமாயண பாடத்தில் தவறுஏற்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறோம். மொழிபெயர்ப்பாளர்கள் தவறாக மொழியர்த்த வார்த்தையை அதைத் திருத்தம் செய்பவர்களும் பார்க்கத் தவறிவிட்டனர். இந்த தவற்றை சரி செய்யக்கோரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். தேவைப்பட்டால், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

கல்வியாளரும், குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டியின் செய்தித்தொடர்பாளருமான மணிஷ் தோஷி கூறுகையில், மாநில அரசின் பள்ளிப்பாட வாரியம் தொடர்ந்து இதுபோன்ற மன்னிப்புகளைக் கேட்டுக்கொண்டே வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பள்ளிப்பாடப் புத்தகத்தில் ஏராளமான தவறுகள் வருகின்றன. இதைச் சுட்டிக்காட்டும் போது அரசு ஏற்றுக்கொண்டு சரிசெய்வதாகக் கூறுகிறது. ஆனால், இந்தத் தவறுகள் சாமானிய மக்களுக்குத் தெரிவதில்லை. ஒருவேளை சீதையைக் கடத்தியது ராமர்தான் என்று மாணவர்கள் படித்து உண்மை என்று நம்பி இருந்தால், வரலாற்றுப்பிழை ஏற்பட்டிருக்கும் எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x