Last Updated : 01 Jun, 2018 12:51 PM

 

Published : 01 Jun 2018 12:51 PM
Last Updated : 01 Jun 2018 12:51 PM

இடைத்தேர்தல்: உ.பி.யின் ஒரே முஸ்லிம் எம்.பி. வென்றது எப்படி?

சுதந்திர இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் 2014 மக்களவை தேர்தலில் ஒரு முஸ்லிம் கூட உபியில் வெல்ல முடியவில்லை. தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் முதல் முஸ்லி தபஸ்யூம் ஹசன்(47 வயது) வெற்றி பெற்றுள்ளார்.

உ.பி மக்கள் தொகையின் மூன்றாவது நிலையில் முஸ்லிம்கள் சுமார் 19 சதவிகிதம் உள்ளனர். இதனால், ஒவ்வொரு மக்களவை தேர்தலிலும் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் பெருமளவில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களில் சிலர் வெற்றி பெற்று வந்தனர்.

ஆனால், கடந்த மக்களவை தேர்தலில் வீசிய நரேந்திர மோடி அலையால் உபியின் 80 தொகுதிகளில் ஒரு முஸ்லிம் வேட்பாளருக்கும் வெற்றி கிடைக்கவில்லை. இதில், 73 தொகுதிகள் பெற்ற பாஜகவும் ஒரு முஸ்லிம் வேட்பாளரையும் போட்டியிட வைக்கவில்லை. எனினும், தனது அமைச்சரவையில் முக்தார் அப்பாஸ் நக்வீ மற்றும் நஜ்மா ஹெப்துல்லா ஆகிய இருமூஸ்லிம்களுக்கு வாய்ப்பளித்தார் பிரதமர் மோடி. இந்த இருவரும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தற்போது நடைபெற்ற கைரானா இடைத்தேர்தலில் முதல் முஸ்லிம் எம்பியான தபஸ்யூம் ஹசன் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ராஷ்டிரிய லோக்தளம் கட்சியின் வேட்பாளரான தபஸ்யூமிற்கு கிடைத்த சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் ஆதரவு ஒரு முக்கியக் காரணம்.

உ.பி.யின் மேற்குப்பகுதியில் உள்ள ஷாம்லி மாவட்டத்தில் கைரானா அமைந்துள்ளது. இங்கும் அருகிலுள்ள முசாபர்நகரிலும் 2013-ல் ஏற்பட்ட மதக்கலவரம் அம்மக்களை இரண்டாகப் பிரித்திருந்தது. இது, 2014 மக்களவை தேர்தலில் கைரானா பாஜக வசம் சென்றதன் காரணமாக இருந்தது. எனவே, கைரானாவின் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதும் அங்கு இந்து-முஸ்லிம்களுக்கு இடையிலான பிரச்சாரமாகத் தொடங்கியது.

ஜாட் சமூகம்

பாஜகவின் வேட்பாளரான மிர்கங்காசிங், இந்து ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர். அதேபோல், தபஸ்யூம், முஸ்லிம்களின் ஜாட் சமூகத்தை சேர்ந்தவர். இருவருமே கைரானாவின் முக்கிய அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர்கள். கடந்த 20 வருடங்களாக இந்த இரு குடும்பங்களை சேர்ந்தவர்களே கைரானாவின் எம்பியாக இருந்து வருகின்றனர். மற்றவர்களை நெருங்கவிடுவது இல்லை.

மிர்கங்கா, கைரானாவின் முன்னாள் பாஜக எம்பி ஹுக்கும்சிங்கின் மகள். சமாஜ்வாதியின் முன்னாள் எம்பியான முனவர் ஹசனின் மனைவி தபஸ்யூம். 2014-ம் ஆண்டில் தஸ்யூம் சமாஜ்வாதி சார்பில் போட்டியிட்டு ஹுக்கும்சிங்கிடம் தோல்வியுற்றார்.

அதற்கு முன்பான 2009 மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் எம்பியாக தபஸ்யூம் இருந்தார். கைரானாவில் தன் பிரச்சாரத்தை தொடங்கிய முதல்வர் யோகி ஆதித்யநாத், அப்பகுதியில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் எழுந்த முகம்மது அலி ஜின்னாவின் உருவப்படப் பிரச்சனையை எழுப்பியிருந்தார்.

இதற்கு எதிர்கட்சிகள் சார்பில், ’நமக்கு கன்னா(கரும்பு) தான் பிரச்சனையே தவிர ஜின்னா அல்ல’ என சமாளித்தனர். கைரானாவில் சுமார் 40 சதவிகிதம் முஸ்லீம்கள் உள்ளனர். இந்த நிலையில், பாஜகவை எதிர்த்து ஆர்எல்டியின் வேட்பாளரான தபஸ்யூம் 49,291 வாக்குகளில் வெற்றி

பெற்றுள்ளார்.

எனவே, முசாபர்நகர் கலவரத்திற்கு பின் முதன்முறையாக இருபிரிவினர் இடையே மீண்டும் மதநல்லிணக்கம் நிலவி இருப்பதாகவும் கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x