Last Updated : 01 Jun, 2018 08:35 AM

 

Published : 01 Jun 2018 08:35 AM
Last Updated : 01 Jun 2018 08:35 AM

சிபிஎஸ்இ அரசு பள்ளிகளில் பணியாற்ற மீண்டும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு

நாடு முழுவதிலும் உள்ள மத்திய அரசின் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆசிரியராக பணியில் சேர்வதற்கான, மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடிஇடி) மீண்டும் நடைபெற உள்ளது. கடைசியாக 2006-ல் நடைபெற்ற இந்தத் தேர்வு கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

மத்திய அரசுக்கு சொந்தமான கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா பள்ளிகள் மற்றும் மத்திய அரசின் நிதி உதவி பெறும் சிபிஎஸ்இ பள்ளிகள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் ஆசிரியராக சேர, கல்வி உரிமை சட்டத்தின்படி மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வந்தது. மத்திய பள்ளிக் கல்வி வாரியத்தால் (சிபிஎஸ்இ) நடத்தப்படும் இதில் தேர்வானவர்கள் மட்டுமே மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற முடியும்.

இந்தத் தேர்வு கடைசியாக செப்டம்பர் 2016-ல் நடைபெற்றது. அதன்பிறகு புதிய நடைமுறை வகுக்கப்பட்ட பிறகு நடத்தப்படும் எனக் கூறி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வை மீண்டும் நடத்துமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சிபிஎஸ்இ-க்கு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சக வட்டாரம் ‘தி இந்து’விடம் கூறும்போது, “சிடிஇடி தேர்வுக்காக சிபிஎஸ்இ-யால் வகுக்கப்பட்ட புதிய நடைமுறைக்கு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, இந்த தேர்வு வரும் செப்டம்பர் முதல் மீண்டும் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்றனர்.

கடந்த 2011 முதல் சுமார் 6 வருடங்களாக நடத்தப்பட்டு வந்த சிடிஇடி 2016-ல் நிறுத்தப்பட்டதும், ஆசிரியர் பணியில் சேர விரும்பிய ஆயிரக்கணக்கானவர்கள் பிரச்சினைக்கு உள்ளானார்கள்.

இந்தத் தேர்வு பிப்ரவரி மற்றும் செப்டம்பர் என ஆண்டுக்கு 2 முறை நடத்தப்பட்டு வந்தது. இதில் தேர்வானவர்களை மத்திய அரசு உதவிபெறும் சில தனியார் பள்ளிகள் சேர்க்காமல் இருந்தனர். இப்போது மத்திய அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் சிடிஇடி தேர்வில் வெற்றி பெற்றவர்களைப் பணியில் சேர்ப்பது கட்டயமாக்கப்பட உள்ளது.

கடைசியாக செப்டம்பர் 2016-ல் நடைபெற்ற சிடிஇடி தேர்வை நாடு முழுவதிலும் இருந்து 1.93 லட்சம் பேர் எழுதினர். அதில் சுமார் பத்து சதவீதம் பேர் (26,000) பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். ப்ளஸ் 2 முடித்துவிட்டு தொடக்கப்பள்ளி ஆசிரியர் பயிற்சி மற்றும் ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் பி.எட். முடித்தவர்கள், சிடிஇடி தேர்வு எழுத தகுதி உடையவர்கள் ஆவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x