Last Updated : 01 Jun, 2018 08:33 AM

 

Published : 01 Jun 2018 08:33 AM
Last Updated : 01 Jun 2018 08:33 AM

ரஜினியின் ‘காலா’ திரைப்படத்தை கர்நாடகாவில் த‌டை செய்தது ஏன்?: கன்னட திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த் விளக்கம்

ர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிரான போராட்டங்களில் வாட்டாள் நாகராஜுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் சாரா கோவிந்த். கன்னட நடிகர் ராஜ்குமார் ரசிகர் மன்றத்தின் தலைவரான இவர், 1991 காவிரி கலவரத்தில் தமிழர்களுக்கு எதிராக முழுவீச்சில் செயல்பட்டார். கன்னட திரைப்பட தயாரிப்பாளரான இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவராக உள்ளார். நடிகர் ரஜினி காந்த்தின் ‘காலா’ படத்துக்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ள நிலையில் இது தொடர்பாக சாரா கோவிந்த் ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டி வருமாறு:

ரஜினியின் ‘காலா’ திரைப்படத்தை தடை செய்தது ஏன்?

கர்நாடகாவில் பருவ மழை சரியாக பெய்யாததால் காவிரி வறண்டு போய் இருக்கிறது. விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் உள்ளனர். மக்கள் குடிக்க கூட நீரில்லாமல் இருக்கின்றனர். இதனை புரிந்துகொள்ளாமல் தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க வேண்டும் என ரஜினி பேசியுள்ளார். இதேபோல கர்நாடகா நீண்ட காலமாக எதிர்த்துவரும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்கிறார். ரஜினியின் பேச்சால் கன்னடர்களின் மனம் புண்பட்டுள்ளது. கர்நாடகா முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனை சுட்டிக்காட்டி கன்னட அமைப்பினர் ரஜினியின் ‘காலா’ படத்தை திரையிடக்கூடாது என எங்களுக்கு கடிதம் அனுப்பினர். கன்னட மக்கள் மற்றும் அமைப்பினரின் கோரிக்கையை ஏற்று, ‘காலா’ வுக்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒப்பீட்டளவில் சிறிய எண்ணிக்கையில் உள்ள‌ கன்னட அமைப்பினர் சொல்வதாலே, ஒரு படத்துக்கு தடை விதித்து விட முடியுமா? அரசும் பெரும்பான்மை மக்களும் என்ன நினைக்கிறார்கள் என தெரிந்துகொள்ள வேண்டாமா?

வாட்டாள் நாகராஜ் போன்ற கன்னட அமைப்பினர் சொல்வதால் மட்டுமே தடை விதிக்கவில்லை. ஒட்டுமொத்த கன்னட‌ மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் விதமாக இந்த முடிவை எடுத்துள்ளோம். காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிராக யார் பேசினாலும், அவர்களை கன்னட மக்கள் ஏற்க மாட்டார்கள். அரசும், பெரும்பான்மை மக்களும் எங்கள் பக்கமே இருக்கிறார்கள். அதற்கு காவிரி விவகாரத்தில் கன்னட அமைப்பினர் நடத்திய முழு அடைப்பு போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியே எடுத்துக்காட்டு.

‘திரைப்படத்துக்கு சாதி, மத, மொழி பேதம் இல்லை’ என்று நீங்களே பலமுறை கூறியிருக்கிறீர்கள். இப்போது அரசியல் காரணங்களுக்காக‌ கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பதால் ‘காலா’ திரைப்படத்தை தடை செய்தது சரியா?

நான் சொன்னது உண்மை தான். ஒட்டுமொத்தமாக‌ தமிழ் படங்களுக்கு நாங்கள் தடை விதிக்கவில்லை. கர்நாடகாவுக்கு எதிராக பேசிய ரஜினி, கமல் படங்களுக்கு மட்டுமே தடை விதித்துள்ளோம். கன்னட மக்களின் உணர்வுடன் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொள்கை எல்லாம் பேசிக்கொண்டிருக்க முடியாது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூருவில் நடந்த திரைப்பட நிகழ்ச்சியில் நடிகர் விஷாலும் நீங்களும் கலந்துகொண்டீர்கள். அப்போது விஷால், தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என பேசினார். அதற்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் அவரது பேச்சை ஆமோதித்தீர்கள். அதன்பிறகு விஷால் நடித்த படங்களும் கர்நாடகாவில் வெளியானதே?

அப்போது இருந்த சூழ்நிலை வேறு. அது மட்டுமல்லாமல் விஷால் வெறும் நடிகர். அவர் அரசியல் கட்சி தொடங்கவில்லை. ஆனால் கமல் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். ரஜினி தொடங்கப் போகிறார். எனவே அவர்களின் பேச்சை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

‘காலா’ தடையால் திரைப்பட விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் வருத்தம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறதே?

அது தவறான செய்தி. கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தன்னிச்சையாக இந்த முடிவை எடுக்கவில்லை. ஏறக்குறைய 80 பெரிய திரைப்பட தயாரிப்பாளர்கள், வெளியீட்டாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், மல்டிபிளக்ஸ் நிர்வாகிகள் எல்லோரையும் கலந்து ஆலோசித்து இந்த முடிவை எடுத்தோம். ‘காலா’ படத்தை கன்னட அமைப்பினர் தீவிரமாக எதிர்ப்பதால் திரையரங்க உரிமையாளர்கள் அந்தப் படத்தை திரையிடத் தயங்குகிறார்கள். இப்படி இருக்கும்போது வருத்தம், நஷ்டம் என்ற பேச்சுக்கெல்லாம் இடமில்லை.

இதேபோல முன்பு ரஜினியின் குசேலன், சத்யராஜ் நடித்ததால் பாகுபலி-2 ஆகிய படங்களை திரையிட தடை விதிக்கப்பட்டது. பின்னர் ரஜினியும், சத்யராஜும் மன்னிப்பு கேட்ட பிறகு திரையிட அனுமதிக்கப்பட்டது. அதே போல இப்போது ரஜினி வருத்தம் தெரிவித்தால் ‘காலா’வை அனுமதிப்பீர்களா?

இதற்கு என்னால் பதில் சொல்ல முடியாது. இதற்கு முடிவெடுக்க வேண்டியது கன்னட அமைப்புகள் தான். ஒரு கன்னட ஆதரவாளனாக சொல்லவேண்டுமென்றால், அப்போதைய சூழல் வேறு. இப்போது ரஜினி தமிழகத்தில் ஓர் அரசியல் சக்தியாக இருக்கிறார். அவர் தமிழகத்துக்கு ஆதரவாக பேசினால், கன்னடர்கள் பொறுத்துக்கொள்வார்களா?

உங்களுக்கும் ரஜினிக்கும் தனிப்பட்ட முறையில் மனவருத்தம் இருக்கிறது. அதனால்தான் ‘காலா’ படத்துக்கு பெரிதாக எதிர்ப்பு கிளம்புவதற்கு முன்பே தடை விதித்திருக்கிறீர்கள் என பேச்சு அடிபடுகிறதே?

அதெல்லாம் சுத்தப் பொய். ரஜினியை எனக்கு நீண்ட காலமாக தெரியும். எனக்கும் அவருக்கும் எந்த மன வருத்தமும் கிடையாது. எனது மகன் திருமணத்துக்கு கூட நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்தேன். திரைப்படத்துறை குறித்து நிறைய பேசி இருக்கிறோம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட பெங்களூருவில் நானும் ரஜினியும் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினோம். அப்போது காவிரி விவகாரத்தை பற்றி பேச்சு திரும்பியபோது ரஜினி, “இந்த விஷயத்தை இரு மாநிலமும் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். இதில் அப்பாவிகள் பாதிக்கப்படக் கூடாது. தேவைப்பட்டால் நீங்கள் ஒரு குழுவாக சென்னை வாருங்கள். நாங்கள் ஒரு குழுவாக பெங்களூரு வருகிறோம். இந்த விஷயத்தை பேசித் தீர்ப்போம்” என்றார். ஆனால் இப்போது மாற்றிப் பேசுகிறார்.

சரி. காவிரி பிரச்சினைக்கும், ‘காலா’ பிரச்சினைக்கும் என்ன தான் தீர்வு?

ரஜினி சொன்னது போல் பேசித் தான் தீர்க்க வேண்டும். ஆனால் ‘காலா’ தரப்பில் இருந்தோ, ரஜினி தரப்பில் இருந்தோ இதுவரை எங்களிடம் யாரும் பேசவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x