Last Updated : 01 Jun, 2018 08:28 AM

 

Published : 01 Jun 2018 08:28 AM
Last Updated : 01 Jun 2018 08:28 AM

கர்நாடக அமைச்சரவையில் மஜதவுக்கு நிதி, காங்கிரஸுக்கு உள்துறை

கர்நாடக அமைச்சரவையில் நிதித் துறையை மஜதவும் உள்துறையை காங்கிரஸும் பகிர்ந்து கொள்வது என்று முடிவெடுக்கப் பட்டுள்ளது.

கர்நாடக தேர்தலுக்குப் பிறகு மதச்சார்பற்ற ஜனதா தளமும் காங்கிரஸும் இணைந்து ஆட்சி அமைத்துள்ளன. முதல்வராக மஜத தலைவர் குமாரசாமியும், துணை முதல்வராக காங்கிரஸை சேர்ந்த பரமேஸ்வரும் பதவியேற்றனர். ஆனால் அமைச்சரவை பகிர்வில் இரு கட்சியினரிடையே ஒருமித்த கருத்து எட்டப்படாததால், கடந்த ஒரு வாரமாக அமைச்சரவை பதவியேற்பு நடைபெறவில்லை.

இதனால் மஜத தலைவர்கள் காங்கிரஸ் தலைவர்களுடன் 5 கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் முதல்வர் குமாரசாமி டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தியுடன் பேசினார். முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்கள் குலாம் நபி ஆசாத், வேணுகோபால் ஆகியோரிடம் பேச்சு நடத்தினார். இதில் 32 அமைச்சர் பதவிகளில் காங்கிரஸுக்கு 21, மஜதவுக்கு 11 என பிரித்துக் கொள்ளப்பட்டது.

ஆனால் நிதித்துறை, உள்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை காங்கிரஸ் கோரியதால் இழுபறி நீடித்தது. இந்நிலையில் மஜத பொதுச் செயலாளர் டேனிஷ் அலி நேற்று டெல்லியில் குலாம் நபி ஆசாத், வேணுகோபால் ஆகியோரிடம் மீண்டும் பேச்சு நடத்தினார். அப்போது குறைந்தபட்ச பொதுக் கொள்கை மற்றும் அமைச்சரவை பகிர்வு குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து டேனிஷ் அலி கூறும்போது, “காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் மஜதவுக்கு நிதித்துறை, காங்கிரஸுக்கு உள்துறை என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தேவகவுடா, குமாரசாமி ஆகியோருடன் ஆலோசித்த பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்” என்றார்.

இந்நிலையில் மஜதவுக்கு நிதி, கல்வி, வேளாண்மை, வருவாய் ஆகிய துறைகளும் காங்கிரஸுக்கு உள்துறை, உயர்கல்வி, வீட்டு வசதி, பெங்களூரு வளர்ச்சி உள்ளிட்ட துறைகளும் ஒதுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x