Last Updated : 04 May, 2018 06:46 PM

 

Published : 04 May 2018 06:46 PM
Last Updated : 04 May 2018 06:46 PM

‘தலித்துகள் தாக்கப்பட்டபோது வேடிக்கை பார்த்து மவுனம் காத்தீர்களே மோடி’: ராகுல் குற்றச்சாட்டு

நாடு முழுவது தலித் மக்களுக்கு எதிராக வன்முறை அரங்கேறிய போதும், தாக்கப்பட்ட போதும் அதுகுறித்து கண்டிக்காமல் வேடிக்கை பார்த்து மவுனமாக இருந்தீர்களே மோடி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 12-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து, பாஜக, காங்கிரஸ் தீவிரமாக இறங்கியுள்ளன. பிரதமர் மோடி ஒருபுறமும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒருபுறமும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கல்கி நகரில் இன்று ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

பிரதமர் மோடி தலித்துகள் நிலை குறித்து வருத்தப்படுவது போல், வேதனைப்படுவதுபோல் முதலைக் கண்ணீர் வடிக்கிறார். நாடு முழுவதும் தலித்துகள் உயர் சாதியினராலும், பாஜகவினராலும் தாக்கப்பட்டபோது, மோடி மவுனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அதைக் கண்டித்து எதுவுமே பேசவில்லை.

சமூகத்தில் விழிம்பு நிலையில் இருக்கும் பிரிவினரை புறக்கணத்துவிட்ட மோடி, வசதி படைத்தவர்களுக்கும், தொழில்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் ஆதரவாக நடந்து கொள்கிறார். தாதா சாஹேப் அம்பேத்கர் குறித்து பேசும் பெருமையாகப் பேசும் மோடி, மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு அனுமதிக்க மறுக்கிறார்.

உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேச, மஹாராஷ்டிரா, மாநிலங்களில் பாஜகவினரும், இந்து அமைப்புகளும் தலித் மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியபோது, ஒருவார்த்தை கூட மோடி பேசவில்லை.

இந்தத் தேசத்திலேயே கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு மட்டுமே, மத்திய அரசு தலித்துகள், பழங்குடியினருக்கு ஒதுக்கிய பணத்தில் பாதியளவு முறைப்படி செலவு செய்து இருக்கிறது, அவர்களுக்காக மட்டும் செலவு செய்து இருக்கிறது.

சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சி அடையும் போது, மத்திய அரசு கோடிக்கணக்கான பணத்தைச் சேமிக்க முடிந்தது. அந்த பணத்தை, தலித்துகள், பெண்கள், ஏழைமக்களுக்காகச் செலவிட்டு இருக்கலாம். ஆனால், குறிப்பிட்ட 10 தொழில் அதிபர்களின் நலனுக்காக மோடி செயல்பட்டார்.

காங்கிரஸ் ஆட்சியின் கீழ் கர்நாடக மாநிலத்தில் வேலைவாய்ப்பு அளவு அதிகரித்துள்ளது. விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைத்தால் அடுத்த 10 நாட்களில் விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

மத்தியில் மீண்டும் ஆட்சி அமைப்பதற்காக ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களின் தேர்தலையும், நாடாளுமன்றத்தோடு நடத்த மோடி திட்டமிடுகிறார். அந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெறும் என நம்பிக்க இருக்கிறது.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x